Pages

அரண்

ஜீன் 24, 2007 காஷ்மீரின் குப்வாரா பகுதி அருகே இந்திய எல்லைக்குள் அத்துமீறி ஊடுறவிய ஐந்து தீவீரவாதிகளை தடுத்து, அந்த துப்பாக்கி சூட்டில் தன் உயிரையும் கொடுத்துள்ளார், ஜீனியர் கமிஷன் ஆபிசர் (JCO) - சுபேதார் லால் (Naib Subedar Chunni Lal). இதனால் இவர் குழுவிலுள்ள மற்ற இராணுவ வீரர்கள் உயிர் தப்பினர்.

இவருக்கு இது முதல் முறையல்ல! சியாசனின் (Siachen) 21,153 அடி (பயங்கரமான குளிர்பிரதேசம்) மேலேயுள்ள பானா பகுதியை கைப்பற்றும்போது இவரின் பங்கு மிகப் பெரியதாம்.

அசாத்திய துணிச்சல், வீரம் உள்ள இராணுவ வீரர்களுக்கு கொடுக்கும் வீர் சக்ரா விருதைப் பெற்றவர். இந்தியாவில் இருந்து ஐ.நா. அமைதி குழுவில் மூலம் சுடான் நாட்டுக்கு சென்று வந்தவர்.

சுபேதார் லாலுக்கு வயது 39. மனைவி மற்றும் 16 வயதில் மகனும், 8 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளார்கள்.

இவருக்கு "ஏதோ ஒரு வகை"யில் கடன்பட்டதாகவே நினைக்கிறேன். அதை எப்படி திருப்பி கொடுப்பது.....
குறைந்தபட்சம்..... அந்த குடும்பத்திற்கு எந்த வகையிலாவது உதவ முடியுமா என்று தெரியவில்லை....

நாளை (ஜீன் 27, 2007), ஜம்மு தோடா மாநிலத்திலுள்ள Bhaar கிராமத்தில் அவருடைய இறுதி சடங்குகள் நடக்க உள்ளது. அவருடைய ஆத்மா சாந்தியடையவும்.... அவருடைய குடும்பத்தினருக்கு நம்முடைய மரியாதையும், தேவையான சக்தி தர பிராத்தனைகளும்...

சில மாதங்களுக்கு முன்பு ஒரு குழந்தையை (கிணறா / பயங்கரமான பள்ளமா... நினைவில் இல்லை...?) காப்பாற்ற அரசாங்கமும், மீடியாவும் வரிந்து கட்டிக்கொண்டு வந்தது. அதற்கும்மேலாக சுபேதார் லால் குடும்பத்திற்கு செய்தால் அந்த ஆத்மாவுக்கு செய்யும் ஒரு 'சின்ன' மரியாதையாக இருக்கும். செய்வார்களா?

புது வசந்தம்

இந்தப் படம் வந்தப்ப, கல்லூரியில் அடியெடுத்து வைத்த நேரம். விக்கிரமனின் முதல் படம்கூட. படம் பார்த்துவிட்டு வந்து விக்கிரமனின் இரசிகன் ஆயிட்டதாகூட சொல்லலாம். அந்தப் படத்தின் சுவரொட்டிகளில் இருக்கும் வசனங்களையெல்லாம் டைரியில் எழுதி வைத்திருந்த காலம்...

அப்படி அந்த படத்தில் எனக்கு என்ன பிடிச்சது.... புது இயக்குநர் என்பதலாயா, படம் எடுத்த விதமா, கதையா, நட்பா - காதலானு கதாநாயாகி பேசும் இறுதிகாட்சியின் வசனங்களா.... தெரியலை.. இப்படி விக்கிரமனின் "எல்லா" படங்களையெல்லாம் பார்த்தவன்... 'பூவே உனக்காக' வரை...[அப்ப இதுக்கு முன்னாடி அவர் எடுத்த படம்லாம் நல்லாருக்குகிறியானுலாம் கேக்காதீங்க...;) ] அப்பொழுது அந்தப் படத்தை பார்த்த பொழுது எனக்கு ஏற்பட்ட சில எண்ணங்கள் நந்தாவுக்கும் ..... அதில் வந்த மறு மொழிகளையும் படித்து விட்டு கொஞ்சம் நேரம் சிரிச்சேன்கிறது உண்மைதான்.

ஒரேமாதிரியான கதை களம், 'லலலல ....லாலா...' னு வருகிற பின்னனி இசை - முக்கியமா கதாநாயாகன் பேசுறப்ப, குமுதம், ஆ.வி ல வந்த காமெடி துணுக்குகள்னு ரொம்பவே அழுத்துப் போனது. அகத்தியன், சேரன், அமீர் போன்ற இயக்குநர்களின் வரிசையில் வர வேண்டியவ்ர்... .இன்னும் அதே 'புது வசந்தம்' நிலையில் இருக்கிறாரோ என்ற எண்ணமும் உண்டு.

சில வருடங்களுக்கு முன்பு, 'விக்கிரமனின் இரசிகன் ' கதையை என் மனைவிடம் சொல்ல இன்றுவரை ஒவ்வொரு முறையும் விக்கிரமன் படம் வரும்பொழுது... என்னை செய்யும் கிண்டலில் இருந்து 'தப்பிக்க' வழி தேடி கொண்டிருக்கிறேன்.

ஆனால் ஒன்னு மட்டும் உண்மை... 'சின்னத்தம்பி' பி.வாசு, 'சிவகாசி' பேரரசு போன்ற இயக்குநர்கள் மாதிரி கலாச்சார சீரழிவு அவர் படங்களில் இல்லை. அந்த வகையில் மட்டும் இப்பொழுது எனக்கு விக்கிரமன் OK.

இப்பொழுதலாம் தொலைக்காட்சியில் விக்கிரமன் படம் வந்தாகூட பார்க்கிறதில்லை.... 'புது வசந்தம்' மட்டும் விதிவிலக்கு......

மகளிர் மட்டும்

ஒரு வழியாக, பிரதிபா பாட்டீல் அடுத்த குடியரசுத் தலைவராக வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது.

இந்தியா சுதந்திரம் பெற்ற இத்தனை ஆண்டுகளில், குடியரசுத் தலைவர் பதவிக்கு ஒரு பெண்ணைத் தேர்வு செய்திருப்பது வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்று சோனியா காந்தி வர்ணித்துள்ளார். என்னமோ, 'அடுத்த குடியரசுத் தலைவர் ஒரு பெண்தான் வரவேண்டும்' என்று முதலில் இருந்து சொன்னது போலவும் 'அதற்கு பிரதிபா பாட்டீல் அவர்கள்தான் சரியான தேர்வாக இருக்கும்' என்பது போலவும் விளக்கம் அளிக்கிறார்கள்.

அர்ஜுன் சிங், சிவராஜ் பாட்டீல், சுசில் குமார் ஷிண்டே, கரண் சிங் - இப்படி பட்டியலில் கடைசியாக, 'ஏன் ஒரு பெண் வேட்பாளராக இருக்ககூடாது?' என்ற கேள்வி வந்தவுடன் இறுதியாக பிரதிபா பாட்டீல் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இப்பொழுது உள்ள நம் கலாமும், பிரதிபாவும் முதல் தேர்வு இல்லையே! 'கேலிக்கூத்தான' நிர்பந்த அரசியல்தான் காரணம்.

முதலில், பிரதிபா பாட்டீல் அவர்கள் பைரோன் சிங் ஷெகாவத்க்குதான் நன்றி சொல்லணும். தாக்குர் சமூகத்தவர் என்றதும் 'இந்திய குடியரசுத் தலைவர்' தகுதி கிடைத்து விட்டது.

குடியரசுத் தலைவராக வரவேண்டியவரின் நேர்மை, கல்வி, அனுபவம், சேவை, விருப்பு, வெறுப்பு இல்லாத போக்கு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்திருந்தால் அவருக்கும் அழகு.... அந்த பதவிக்கும் அழகு. தெரிந்தோ தெரியாமலோ அப்படிப்பட்ட ஒருவரைதான் தேர்வு செய்திருக்கிறார்கள் என்கிற செய்தி ஓர் ஆறுதல்.

இப்பொழுது புது கதையாக, ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி(!) அப்துல் கலாமை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என அப்துல் கலாம் ஏற்கெனவே அறிவித்துள்ளார். இருந்தாலும், அவரை நேரில் சந்தித்து தேர்தலில் மீண்டும் போட்டியிட வைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும் என்று ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி தெரிவித்துள்ளது. விடமாட்டாங்க போல...

இதில் காமெடி என்னவென்றால், இந்த புதிய ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி (8 கட்சிகள்)க்கு உள்ள மொத்த வாக்குகள் தோரயமாக 1.10 லட்சம் (தான்). தற்போதைய நிலையில் இந்த வாக்குகளைக் கொண்டு குடியரசுத் தலைவர் தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தி விட முடியாது. இதில் யார் காமெடியில் சிறந்தவர்கள் என்று நாம்தான் முடிவு செய்ய வேண்டும் போல!

இதைத் தொடர்ந்து, வழக்கம்போல நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டில் மூன்றில் ஒரு பங்கு இருக்க வேண்டும் என்ற பேச்சு எழுந்துள்ளது. உண்மையிலேயே அரசியல் கட்சிகளுக்கு எவ்வளவு ஈடுபாடு இருக்கிறது என்பது சந்தேகத்துக்குரிய கேள்வியாகவே இருக்கிறது.

கட்சிக்களுக்கும் அதன் தலைவர்களுக்கும் இதில் உண்மையான ஈடுபாடு இருக்கும்பட்சத்தில் தேர்தலின் போது, தகுதியும் திறமையும் உள்ள பெண் வேட்பாளர்களை நிறுத்திருக்கலாம். அல்லது அந்த கட்சியின் தேர்தல் நேரத்தில் மூன்றில் ஒரு பங்கை பெண்களுக்காக ஒதுக்கி இருக்கிறார்களாம். சும்மா இதில் எல்லா கட்சிக்கும் அக்கறை இருப்பதைப்போல, 'வழக்கம்போல' நம்மை ஏமாற்றி கொண்டு இருக்கிறார்கள்.

எப்பொழுதும் அடுத்தவர்களுக்கு உபதேசம் பண்ணுவது ரொம்ப எளிதானதுதானே!

முன்னாள் சிவாஜி ராவ்க்கு கோவணாண்டி சீறல் கடிதம்

போன வாரம் ஏதோ ஒரு சந்தர்பத்தில் தோழியுடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, 'தலைவரை' பற்றி பேச்சு வந்தது.

'மக்களை...குறிப்பா அவர் இரசிகர்களின் அறியாமையை நன்றாக பயன்படுத்தி ... அவர் காசு சம்பாதிச்சிகிட்டு இருக்காரு. எப்பதான் நாம ஏமாந்துகிட்டு இருக்கோம்னு புரிய போகுதோனு தெரியலை'னு சொல்ல.......

அதுக்கு அவர், 'அப்படிலாம்... யாரும் யாரையும் ஏமாத்த முடியாதுப்பா! சினிமாவை பொழுதுபோக்கா பாருங்க! பிடிக்கலான அவருடைய படத்தை புறக்கணீங்க!' னு சொல்ல .............. (வெட்டி) வாக்குவாதம் நீண்டது.

ஆனா, இந்த வார பசுமை விகடன்ல, நதி நீர் இணைப்பும்.... ஒரு கோடி ரூபாயும் மறந்து போகுமா? கவர் ஸ்டோரி வந்திருக்கு.

'ஜீரோ பட்ஜெட்'னு இன்னொரு சிறப்பு கட்டுரையும் வந்திருக்கு. அருமையான கட்டுரை! கண்டிப்பா படிச்சி பாருங்க!!

நன்றி: பசுமை விகடன்!

இப்ப இந்தக் கட்டுரையை பார்க்காதவர்களுக்காக .........
[இது ஏன் பசுமை விகடன்ல வந்ததுனுலாம் கேக்க கூடாது?]


******

நதி நீர் இணைப்பும்.... ஒரு கோடி ரூபாயும் மறந்து போகுமா?

சிவாஜிக்கு கோவணாண்டி சீறல் கடிதம்

சிவாஜியாக அவதாரமெடுத்திருக்கும் முன்னாள் சிவாஜி ராவ்... இந்நாள் 'ரஜினி அங்கிள்' அவர்களுக்கு கோவணாண்டியின் கோடானுகோடி வணக்கமுங்க.

ஒவ்வொரு படத்துலயும் ஒலிக்கற உங்க கொள்கைப் பாட்டுக்கு முன்னால எவனும் நிக்கமுடியாது. அதுலயும் இந்த 'சிவாஜி' படத்துல ‘காவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும் மறந்து போகுமா?'னு சும்மா பின்னி பெடலெடுத்திருக்கீங்க. ‘அதுக்கே டிக்கெட் காசு 50 ரூபாயும் சரியாப்போச்சுடா'னு நிச்சயமா தமிழ்நாடே பேசும்!

அப்புறம், ‘காவிரி ஆறு'னு நீங்க சொன்னதுமே... அந்த 'ஒரு கோடி ரூபாய்' வாக்குறுதி என்னோட நினைப்புக்கு வந்து தேவையில்லாம இம்சை பண்ணுதுங்க. என்னதான் யோசிச்சாலும் அதுமட்டும் மறந்து போகமாட்டேங் குதுங்க. ஆனா, உங்களுக்கு மறந்துபோயிருக்கும்... கொஞ்ச காலத்துக்கு முன்ன 'கங்கையையும் காவிரியையும் இணைக்க முதல் கல்லை நான் தூக்க தயார்'னு சொன்னீங்களே ரஜினி, அதைச் சொல்றேன்.

உங்களை ஒதுக்கின 'உங்க' கூட்டம், 'காவிரியை மீட்காம ஓயமாட்டோம்'னு நெய்வேலியில பக்காவா 'படம்' காட்டினாங்க. பொங்கி எழுந்த நீங்களோ, 'நதிகளை இணைக்காமல் ஓயமாட்டேன்' என்று பதிலுக்கு சென்னையில 'பலம்' காட்டினீங்க. 'நதிகளை இணைக்க என்னுடைய பங்காக ஒரு கோடி ரூபாயை தருகிறேன்'னு உலகப் பார்வையையெல்லாம் உங்க மேல விழும்படி பரபரப்புக் கிளப்பினீங்க. அதுக்குப் பிறகு, அந்த விஷயத்தை நட்டாத்துல விட்டுட்டு... 'காவிரி மறந்து போகுமா... கருவாடு பறந்து போகுமா'னு குத்தாட்டம் போட ஆரம்பிச்சிட்டீங்க.

'என் ஒரு துளி வியர்வைக்கு... ஒரு பவுன் தங்கக் காசு கொடுத்தது தமிழ் அல்லவா..'னு ஏற்கெனவே ஒரு பாட்டைப் பாடி வெச்சிருக்கீங்க. தங்கக்காசு மட்டுமில்ல... உங்களுக்காகத் தங்கத்துல சிம்மாசனமே கொடுக்கத் 'தங்கத் தமிழன்' தயாரா இருந்த காலம் கூட உண்டுங்க.

எங்கத் தமிழ்நாட்டுச் சனங்க ரொம்ப நல்லவங்க... அப்பாவிங்க... சாதி, மத, மொழி பேதமெல்லாம் பார்க்க மாட்டாங்க... வந்தாரை வாழவைக்கும் தமிழகம்ங்கற பெருமைக்கு பங்கம் வர்றாப்பல எப்பவும் நடந்துக்க மாட்டாங்க... இல்லனா, ஆவேசப் பேச்சுக்கும், அரிதாரப் பூச்சுக்கும் நாட்டையே எழுதி கொடுக்கும் 'ராஜ தரும பரம்பரை'னு பேரு வாங்க முடியுங் களா..? யார், யாரோ வந்து ராஜ்ய பரிபாலனம்ங்கற பேருல நாட்டை கொள்ளை அடிச்சுட்டுப் போறதை வேடிக்கைப் பார்க்க முடியுங்களா..?

இப்பக் கூடப்பாருங்க... 'தெலுங்குத் தமிழன்', 'பச்சைத் தமிழன்'னு சொல்லிக்கிட்டு திரும்பவும் திரையில இருந்து தெறிச்சி விழுந்து தமிழ்நாட்டைக் குத்தகைக்கு எடுத்துக்கிட்டு, கொழிக்கத் துடிக்கறவங்களுக்கு கொடி பிடிச்சிக்கிட்டுதானே நிக்கறான் அப்பாவித் தமிழன்.

சினிமா ஒரேயடியா கை கழுவிப் போற மாதிரியிருந்தா... முழுசா தேச சேவைக்கு வர்றவங்க தான் கூடுதலாயிட்டாங்க. இந்த வேஷக்காரங்களுக்கு மத்தியில உங்களப் பாத்தா மட்டும் கொஞ்சம் பாசக்காரரா தெரியுறீங்க. அதுக்குக் காரணமும் இருக்குங்க. தமிழ்நாடே உங்கமேல பைத்தியமா கிடக்குறதை விட வேற ஒரு காரணம் தேவையே இல்லை. இருந்தாலும் பழைய விஷயமொண்ணையும் எடுத்துவிடறேன்.

'கர்நாடக விவசாயிகளின் மனம் கவர்ந்த தலைவர் பேராசிரியர் நஞ்சுண்டசாமி, உடல்நிலை சரி இல்லாமல் பெங்களூரு கித்வாய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டி ருந்தார். அப்போது, ஒரு அந்திப் பொழுதில் தன்னுடைய கர்நாடக சினிமா நண்பர் அசோக்கை அழைத்துக்கொண்டு நஞ்சுண்ட சாமியைப் பார்க்க வந்தார் ரஜினி. ஒரு பழைய ஜீன்ஸ் பேன்ட், ரப்பர் செருப்போடு ரஜினி வந்து, போன காட்சியைப் பார்த்து, 'அடடா.. ரஜினி எவ்வளவு எளிமையா இருக்காரு. உடம்பு நல்லானதும்.. நதி நீர் இணைப்பு விஷயத்துல ரஜினியையும் இணைச்சுக்கணும்'னு வாய் நிறைய அப்ப சொன்னார் நஞ்சுண்டசாமி.

மேற்கண்ட விஷயத்தை என்கிட்ட சொன்னது... கர்நாடக மாநில தோழர் ஒருத்தர்தான். உங்களோட காவிரி உண்ணாவிரதம்... 'ஒரு கோடி ரூபாய்' வாக்குறுதி இதையெல்லாம் கேள்விப்பட்டு ரொம்பவே நம்பிக்கையோடதான் அப்ப பேசியிருக்கார் நஞ்சுண்டசாமி. அதுக்குப் பிறகு உடல் நிலை சரியில்லாம அவர் இறந்து போயிட்டார். இடையில பல காரணங்களால நீங்களும் அதை மறந்துபோயிட்டீங்க... நம்ம ஊரும் கூட மறந்து போச்சி!
இப்ப, நகரத்துல மட்டுமில்ல... கிராமத்து மூலை முடுக்கு குட்டிச் சுவர் எல்லாத்தையும் குளிப்பாட்டி, போஸ்டர் புத்தாடை அணிவிச்சி, பொங்கி வரும் பூரிப்போட, புதுப்பொலிவோட கண்ணைச் சிமிட்டிச் சிமிட்டி... 'சிவாஜி'யை வரவேற்கத் தயாராகிட்டாங்க. தூக்கத்தையும், துக்கத்தையும் ஒரு சேர தூக்கி எறிஞ்சிட்டு, ஒரு மாச காலமா வன்னி மரம் பிளந்து... வாசல்கால் பந்தலிட்டு, தென்னை மரம் பிளந்து... தெருவெல்லாம் பந்தலிட்டு, குலைவாழை கொணர்ந்து... உங்க கட்&அவுட்டுக்கு கும்பமேளா நடத்திகிட்டு இருக்காங்க..

பெத்த ஜீவன்களை வீட்டுக்குள்ளப் பூட்டி பட்டினி போட்டுட்டு... ரோட்டுல, 'புதுஅண்ணி ஸ்ரேயா’வுக்கு மன்றம் அமைச்சி, அறுசுவை விருந்து படைக்கறாங்க. நீங்க கழுதையோடு ஆடினாலும், குதிரையோடு ஆடினாலும் எங்க இளசுங்க ‘அதை’ கடவுளாக்காம விட மாட்டாங்க. உங்க மேல அப்படி ஒரு மோகமுங்க.

ஏற்கெனவே, 'சிதம்பர பொருளாதாரம்', எங்க கிராமத்து இளசுகளோட ஒட்டுக்கோவணத் தையும் விட்டு வைக்காம உருவிக்கிட்டு போயிகிட்டிருக்கு. அப்பவும் கூட கலங்காம, அண்ணி ‘ஸ்ரேயா’வுக்கு பட்டுபுடவைக் கட்டி அழகு பார்க்கறாங்க!

பிரதமர் மன்மோகன் சிங், வர்த்தக மந்திரி கமல்நாத் ரெண்டுபேரும் வயல்ல போட்டுப் புதைச்சிட்ட விவசாயிகளோட வாழ்க்கையை, வெண்திரை மூலமா 'சிவாஜி'யில தேடிப் புடிச்சிடலாம்னு துடிக்கிறாங்க எங்க விவசாய இளசுங்க. ஆனா நீங்களோ... படம் ரிலீஸ் ஆனதும், ‘ராமன் மாண்டாலும் ராவணன் மாண்டாலும்’ எனக்கொரு கவலை இல்லேனு இமயமலைக்கோ... ஆல்ப்ஸ் மலைக்கோ ஓடிப் போயிடுவீங்க. திரையில நீங்க பாடுறதைப் பார்த்துக்கிட்டு, தானே பாடுறதா கனவுல மிதக்கற எங்க இளசுங்க, கையில காலணாவும் மிஞ்சாமா தூக்கி வீசிட்டு, 'நல்ல வாழ்க்கையைக் காட்டப் போறார் தலைவர்'னு காத்துக்கிட்டே நிக்கப்போறாங்க. இந்த முறையாவது பண்டார வேஷம் கட்டிக்கிட்டு... இமயமலைக்கு ஓடுறதை நிறுத்தப்பாருங்க.

கோடிகோடியா உங்களுக்குக் கொட்டிக் கொடுத்த தமிழகத்துக்கு நன்றிக் கடன் செய்றதுக்கு ஒரு வழியைப் பார்க்கப் போறீங்களா... பொதுமக்கள் வசதிக்காக ஒரு கல்யாண மண்டபம் இடிபடறதையே கலர் கலரா பல கோணங்களில் படம் பிடிச்சு வெச்சுக்கிட்டு ‘தியாக பில்டப்’ பண்ணி தமிழகத்தையே குத்தகைக்கு கேட்கிறவங்க பட்டியல்ல சேரப்போறீங்களா?
ஆந்திரத்து சாமியார், சாய் பாபாவோட பக்தருங்க கொஞ்ச பேரு சென்னையில இருக்காங்க. அதுக்காகவே 200 கோடி செலவு செய்து கிருஷ்ணா நதிநீர் கால்வாயை சீரமைச்சி குடிநீர் கொடுக்கற வேலையில இறங்கியிருக்கார் சாய்பாபா.

ஆனா, தமிழகமே எதிர்பார்க்கற இந்த 'சூப்பர் ஸ்டார் பாபா' தண்ணீருக்காக ஏதாவது செய்யறதுதானே நியாயம்.

'அரசியல்வாதிங்க யாரும் முன் வரல... நான் என்ன பண்றது?'னு ஈஸியா கேட்டுத் தப்பிச்சிடலாம்னு நினைக்காதீங்க. இப்பக் கூட தமிழக முதல்வர் கருணாநிதி, நதி நீர் இணைப்பு விஷயத்தை கையில எடுத்திருக்கார்... அவரோட கைகோத்தாவது... காரியத்தை முடிக்கப் பாருங்க. 'அதெல்லாம் முடியவே முடியாத காரியம்'னு சொல்ல நினைச்சா... இனி, 'காவிரி... கருவாடு'னு உசுப்பேத்தறதையாவது நிறுத்திக்கங்க!

இப்படிக்கு
கோவணாண்டி

@

தில்லு முல்லு

நேற்று வரை தி.மு.கவிற்காக சன் தொலைகாட்சி இருந்தது.
இன்றுமுதல் 'அந்த கடமை'யை ராஜ் தொலைகாட்சி ஏற்றுக் கொண்டது.

என்றும் ஜெயலலிதாவிற்கென்று ஜெயா தொலைகாட்சி.

பா.ம.க. க்கு மக்கள் தொலைகாட்சி. மற்ற சேனல்களைவிட பரவாயில்லை என்று கேள்விப்பட்டதுண்டு.

விஜய் தொலைகாட்சியில் சில நல்ல நிகழ்ச்சிகள் இருந்தாலும், செய்திகள் இல்லை.

ஆகஸ்ட் 15ம் தேதியிலிருந்து 'கலைஞர்' (களு)க்கென்று கலைஞர் தொலைகாட்சி.
ஆகஸ்ட் 17ம் தேதியிலிருந்து காங்கிரஸ்காக 'ஜெய்கிந்த்' தொலைகாட்சியாம்.

நடுநிலையான...... அழுகாச்சி இல்லாம...... மக்களுக்கென்று ஒரு தொலைகாட்சி இருக்கானு தெரியல.

******

NBA இறுதிப்போட்டி San Antonio Spurs Vs Cleveland Cavaliers அணிகளுக்கிடையே இன்னும் இரண்டு நாட்களில் (ஜீன் 7, 2007) ஆரம்பமாக உள்ளது.

அதாவது "கூடைப்பந்து உலகக் கோப்பை - இறுதி ஆட்டங்கள்".
இதில வெற்றி பெற்ற அணி 'World Champion'. திறமையான அணிகள், வீரர்கள்தான் சந்தேகம் இல்லை.

ஆனால், இது அமெரிக்காவிலுள்ள இரண்டு மாநிலங்களுக்குகிடையில் நடக்கும் போட்டி. 'உப்புக்கு சப்பாணியாக' கனடாவில் இருந்து ஒரு அணி. இந்த போட்டியை பல நாட்டு விளையாட்டு இரசிகர்களும் ஆவலோடு பார்க்கிறார்கள். இதில் புரளும் பணங்கள் ஏராளம். ம்ம்ம்.....

தமிழ் நாடும் மேற்கு வங்காளமும் விளையாடும் கால்பந்து அல்லது ஹாக்கி போட்டிகளை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தால்..... நினைத்துப்பார்க்க மட்டும்தான் முடியும்.

நம் நாட்டில் ஏன் எந்தவொரு விளையாட்டையும் திறம்பட திட்டமிட்டு செயல்படுத்த முடியவில்லை? நம் அரசியலும், மக்களின் கல்வி அறிவும்தான் காரணமோ?

********

இரண்டு வாரங்களாக ஈராக்கில் காணமல் போன நான்கு அமெரிக்கா வீரகர்களை அமெரிக்கா இராணுவம் ஒரு குழு அமைத்து ஒவ்வொரு இடமாக, வீடு வீடாக தேடினார்கள். ஒரு பயனும் இல்லாத நிலையில், நேற்று Sunni insurgent குழு, 'நாங்கள்தான் கொன்றோம்' என்று இணைய தளத்தில் அறிவித்துள்ளது.

வழக்கம்போல (அமெரிக்கா) பத்திரிக்கைகள் , மீடியாவில் முக்கிய செய்தியாக இருந்தது. அதிலொன்றும் தவறில்லைதான். ஆனால், பல அப்பாவி ஈராக் மக்களை நிலையை பற்றி ஒரு சாதரண செய்தியாக சொல்கிறார்கள். இவர்கள் உயிர்ரென்றால் முதல் பக்க செய்தி... மற்றவர்களென்றால் கடைசி பக்கம்தான்.

ம்ம்ம்ம்.... உயிரின் விலைகூட பிறந்த அல்லது இருக்கிற நாட்டைப் பொறுத்து மாறுகிறதுபோல......

********

'Koffee with Anu'வில் தன் தந்தை அடிக்கடி சொல்வதாக 'டெல்லி' கணேஷ் மகள் கூறியது:


"வருவதுதான் வரும்.
வருவது........... தானே வரும். "

@

வல்லவனுக்கு வல்லவன்

தற்செயலாக பழைய பாடலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. மனதை ஈர்க்கும் TMSன் குரல்.

பாடல் முழுவதும் கதாநாயகி கண்களில் ஏக்கத்துடன், சோகமே உருவாக தன் நாயகனை தேடி கொண்டிருந்தாள்....

அது யாராக இருக்கும் என பாடல் முடியும் வரை காத்திருந்தால்...

எப்பொழுதும் வில்லனாகவே பார்த்து பழக்கப்பட்டிருந்த, அசோகன். அட...!

இதுதான் அந்த பாடல் வரிகள்:

" ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே உன் காதலை நான் அறிவேன்

இந்த மானிட காதலலாம் ஒரு மரணத்தில் மாறிவிடும்
அந்த மலர்களின் வாசமெல்லாம் ஒரு மாலைக்குள் வாடிவிடும்
நம் காதலின் தீபம் மட்டும் எந்த நாளிலும் கூட வரும்

இந்த காற்றினில் நான் கலந்தேன்
உன் கண்களை தழுவுகின்றேன்
இந்த ஆற்றினில் ஓடுகின்றேன்
உன் ஆடையில் ஆடுகின்றேன்


நான் போகின்ற பாதையெல்லாம்
உந்தன் பூ முகம் காணுகின்றேன்
"

கிட்டதட்ட நாற்பது வருடங்களுக்கு முன்னாள் வெளிவந்த பாடல். இன்றும் மனதை வருடுகிறது.

இரண்டு மூன்று முறையாவது கேட்டிருப்பேன். ஒரு மாலை பொழுதில் இந்தப் பாடலை கேட்டால் மனதில் இனம்புரியாத ஒர் அமைதி. தற்சமயம் முணுமுணுக்கும் பாடல் இதுதான்.

இந்தப் பாடலின் ஒலி ஒளியும் இங்கே

1965 வது வருடம் வெளிவந்தது. மாடர்ன் தியேட்டர்ஸ்ன் 100வது படமாம். இசை: வேதா ( இவரு 'நம்ம தேவா' க்கே அண்ணனாமே... அப்படியா ?! :) )

பாடல் வரிகள் கண்ணதாசனாகத்தான் இருக்க வேண்டும்!

கதாநாயகன்: அசோகன், கதாநாயகி: மணிமாலா.

சரி... இந்தப் படத்தோட வில்லன் யாருனு யூகிக்க முடியுமா? [சிவாஜி, எம்ஜிஆர் காலத்தில் இவரும் ஒரு முன்னனி கதாநாயகன்....!!].