Pages

Showing posts with label மதம். Show all posts
Showing posts with label மதம். Show all posts

எதிரும், புதிரும்

எஸ். குருமூர்த்தி துக்ளக், தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ் எழுதி கொண்டிருக்கும் பொழுதே படித்ததுண்டு. RSS பற்று அதிகம் இருந்தாலும், தேசப்பற்று, பொருளாதரக் கட்டுரைகளால் அவருடைய எழுத்துகளை விரும்பி படித்ததுண்டு.

அப்படித்தான் துக்ளக்கில் வெளிவரும் "தண்ணீர் விட்டா வளர்த்தோம்" கட்டுரையும் வாசித்ததுண்டு. சமீபத்தில் படித்த "மதம் மாற்றுவதே மத நம்பிக்கையானால்..." கட்டுரையை படித்த பொழுது பெரிய ஆச்சரியமோ, அதிர்ச்சியோ இல்லை. ஆனால் இதுமாதிரி எழுதும்பொழுது நடுநிலையாக இரண்டு பக்கமும் ஆராய்ந்து எழுதி இருந்தால், அந்தக் கட்டுரையின்  மேல் ஒரு நம்பிக்கைதன்மை வந்திருக்கும். அப்படியில்லாமல் சிறுபான்மையினரை குறிப்பாக கிறிஸ்தவர்கள் மீது அவருக்கு இருக்கும் துவேசமே மேலோங்கி இருக்கிறது. அதைப் படிக்கும் எவருக்கும், கிறிஸ்தவர்களின் 'அராஜகமும்', 'இப்படி ஒரு மதமா?' என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கும் எனில் அது மிகையில்லை.

20 ஆண்டுகளுக்கு முன்.... மண்டைக்காடு கலவரத்தினால் 'அப்பொழுதய முதலமைச்சர் எம்ஜியார் அவர்கள் கொண்டுவர இருந்த/வேண்டிய மதமாற்ற சட்டத்தை ஜெயலலிதா கொண்டு வந்ததில் என்ன தவறு? ஏன் கிறிஸ்தவர்கள் மட்டும் ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்' என்பது அவருடைய கேள்வி.

சரி....எம்ஜியார் அவர்கள் மதமாற்ற சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்கிற பட்சத்தில் ஒரு முதலமைச்சர் பொறுப்பில் இருப்பவர் என்ன செய்திருக்க வேண்டும்... அந்தந்த மதப் பெரியவர்கள், சட்ட நிபுணர்கள், அரசு அதிகாரிகள் என்றழைத்து ஒரு குழுவை உருவாக்கி அந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கானவைகளை செய்திருந்திருக்கலாம். அப்படி இல்லாமல், காஞ்சி பெரியவரையும் அவரின் மூலம் இவரையும் அணுக வேண்டிய அவசியமென்ன?

ஒருமுறை அன்னை தெரசாவிடம் இந்து அன்பர் ஒருவர் நான் கிறிஸ்தவ மதத்திற்கு மாறபோகிறேன் என்று சொன்னதற்கு, அன்னை அவர்கள் சொன்ன பதில் "உங்கள் மதத்திலிருந்தே நீங்கள் மக்களுக்காக தொண்டாற்ற முடியும்" என்று கூறி மதம் மாறுவதை இருக்கிறார்.

வெர்ஜினாவில் மிகப்பெரிய...பிரமாண்டமான மசூதி இருக்கிறது. தன்னை கிறிஸ்தவ நாடு என சொல்லிக்கொள்ளும் அமெரிக்கா போன்ற நாடுகளில் சில சர்ச்சுகள் கோவில்களாகவும், மசூதிகளாகவும் பயன்படுத்தப்படுவது குருமூர்த்திக்கு தெரிய நியாயமில்லைதான். யாதும் ஊரே யாவரும் கேளீர்.... எம்மதமும் சம்மதமே என்று சொல்லிக் கொள்ளும் நம் நாட்டில் ஒரு சாராரைப் பற்றிய துவேசம் மட்டும் குறையவில்லை.

இப்படியாக அவருடைய கட்டுரையிலிருந்து வரிக்கு வரி எடுத்து எதிர்வாதமும், புள்ளி விவரமும் வைக்கமுடியும். அல்லது அனானி நண்பர் கேட்டதுபோல 'நீயும், உன் மதமும் யோக்கியமானா?'னு கேள்விகளை அடுக்கலாம். ஆனால் இதை எழுத தூண்டிய காரணம் அதுவல்ல.

சர்ச்சுகள் செய்தவைகள் அனைத்தும் சரியென்னும் சொல்ல நான் மத போதகனுமல்ல. பிட்நோட்டீஸ் மூலகாகவோ, பணத்துக்காகவோ, பிரியாணிக்காவோ மதம் மாறியதில் என்ன தப்பு அப்படினு பிராச்சாரமும் பண்ணுவதும் என்னுடைய நோக்கமல்ல. அப்படி செய்வது மிகப்பெரிய தவறு. அதில் சந்தேகமில்லை. இப்படி மதமாறுதல் நான் படித்தவரை விவிலியத்தில் எங்கும் சொல்லவில்லை. சொல்லபோனால் அப்படி மதம்மாறியவர்களால் அந்த மதத்திற்கு சிறுமைதான் தவிர கண்டிப்பாக பெருமையல்ல....

குருமூர்த்தி அவர்கள் சொல்வது போல, 'மதமாற்றம் செய்வதே கிறிஸ்தவமும், கிறிஸ்தவர்களும் வேலை. அதற்கு அவர்களுக்கு கோடி கோடியாக வெளிநாடுகளிலிருந்து பணம் அனுப்பப்படுகிறது. அவர்களுடைய 'சேவை' என்ற போர்வையின் கீழ் தீட்டப்படும் திட்டம்தான் இந்த மத மாற்றம்!' என்பது போன்ற எண்ணத்தை தோற்றுவிக்க முயற்சி செய்துள்ளார்.

சகிப்புதன்மை, பகைவனுக்கும் அன்பு, தன் நண்பனுக்காக உயிரை கொடுப்பதைவிட மேலான அன்பு இல்லை.... போன்ற மகத்தான வாழ்வியலை தன் வசத்திக்காக கட்டுரையாளர் மறைத்து விட்டாரா...? இல்லை விவிலயத்தில் அவருக்கு புரியவில்லையா என்று தெரியவில்லை.... அப்படி புரியாத பட்சத்தில், டி.பி.ஆர், சிறில், சேவியர் பேன்றவர்களின் வலைப்பூவில் எளிமையாக சொல்லியுள்ள பைபிள் குட்டிக்கதகள், கவிதைகள் அவருக்கு யாராவது சொன்னால் நன்றாக இருக்கும்.

கிறிஸ்தவர்களில் கத்தோலிக்க வழிபாட்டு முறையை பின்பற்றுவர்களே அதிகம். இவர்கள் யாரும் வீடு வீடாக சென்றோ, சாப்பாடு போட்டோ கிறிஸ்துவத்திற்கு வாருங்கள் என்று சொல்பவர்கள் அல்ல.

நான் படித்த கிறிஸ்தவ கல்லூரியில் எனக்கு ஸ்ரீதர், காஜா முகமது என்று வகுப்பு தோழர்களுண்டு. எத்தயோ கிறிஸ்தவ கல்லூரிகளில் கிறிஸ்தவ மதத்தை சாரதவர்கள் துறை தலைவர்களாகவும், dean ஆகவும் இருந்ததுண்டு...இப்பொழுதும் இருக்கிறார்கள். கல்லூரி நிர்வாகத்தின் நோக்கம் "மதம் மாற்றுவதே" எனில், 100, 150 பராம்பரிய மிக்க அந்த நிறுவனங்கள் கிறிஸ்தவ அல்லாத மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக கல்வி கற்றுக் கொடுத்து கிறிஸ்தவத்திற்கு மாற்றிருக்கலாம்.  அப்படியல்லாமல், நீதிபதி இலட்சுமணன்,  திரு. அப்துல் கலாம், திரு. கோபால்சாமி (Chief Election Commisioner,  நியூடெல்லி),  சுப்பு ரத்தினம் ஐயா, தஞ்சை போன்றவர்களை நல்ல மனிதனாக இந்த சமூகத்திற்கு தந்ததிற்கு இந்த கல்வி நிறுவனங்களின் பங்கு ஒரு சிறு கடுகளாவது இருந்திருக்கும் என்பது என் எண்ணம்.

ஒவ்வொரு மதத்திலும் குறைகள், நிறைகள் உண்டு. தன் மதத்தின் மேல் ஒருவனுக்கு மரியாதையும், பெருமையும் இருக்கலாம். ஆனால் என் மதம்தான் பெரியது என்ற அகம்பாவமும், மற்ற மதங்களை குறை சொல்லி தன் மதத்தினை நிலை நாட்ட வேண்டும் என்ற எண்ணம் இருக்க கூடாது.

நாம் மகாத்மாகவோ, தெரசாவோ ஆக வேண்டாம்.....முதலில் மனிதனை மனிதனாக... அவன்/அவள் குறை, நிறைகளுடன் ஏற்றுக் கொள்ளுதலும், அன்பு செய்தலையும் முதலில் கற்றுக் கொள்வோம்!!