Pages

Showing posts with label Sunitha Williams. Show all posts
Showing posts with label Sunitha Williams. Show all posts

புரியாத புதிர்

சில வாரங்களுக்கு முன்னால், சில பள்ளிக் குழந்தைகள் (இந்திய) தேசியக் கொடியும், மெழுகுவர்த்தியும் வைத்துக்கொண்டு பிராத்தனை செய்தவாறு இருக்கும் புகைப்படத்தை செய்திதாளில் பார்த்த பொழுது.... சுனிதா வில்லியம்ஸ் சென்ற விண்கலம் நல்லபடியாக தரையிறங்க நடக்கும் பிராத்தனை. படித்தவுடன் 'நமக்கு என்னவாயிற்று?' என்றுதான் தோன்றியது. செய்திதாள்களும் வரிந்து கட்டிக்கொண்டு முதல் பக்க செய்தியாக வெளியிட்டது. காரணம்...அவருடைய பெற்றோர் இந்தியர் மற்றும் அவர் இந்திய வம்சவழியில் வந்தவர் என்பதாலும்!

சில வருடங்களுக்கு முன்னால், மனோஜ் சியாமளன் இயக்கிய திரைப்படம் சக்கைபோடு போட்டு ஆஸ்காருக்கு தேர்வாகியபோது, நம்மூர் பத்திரிக்கைகள் இந்திய வம்சவழியில் வந்தவர் என்ற ஒரே காரணத்தினால் அவரைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதித் தள்ளியது.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபொழுது கல்பனா சவ்லா பெயரில் விருது கொடுக்கப்பட்டபொழுதும் 'சாதனை பெண்' மட்டும் காரணமல்ல அவர் இந்திய வம்சவழியில் வந்தவர் என்பதே பெரியதாக இருந்தது.

இதுபோல் பாபி சிண்டால் [அமெரிக்கா மாநிலத்தின் முதல் இந்திய அமெரிக்க ஆளுநர்] மற்றும் நோரா ஜோன்ஸ் [கிராமி விருது சாதனையாளர்] இவர்களும் இந்த பட்டியலில் அடங்குவர்.

இவர்கள் பாராட்டுக்குறியவர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இவர்களால் நமக்கும் நம் நாட்டுக்கும் பெருமை, 'Indian Idol' என்பதுபோல 'அதிகப்படுத்தி' காட்டுது புரியாத புதிராகவே இருக்கிறது. எப்படி இவர்களால் இந்தியாவுக்கு பெருமை..?!

சுனிதா வில்லியம்ஸ் தந்தை மட்டும்தான் இந்தியாவில் பிறந்தவர். சுனிதா வில்லியம்ஸ் பிறந்தது மற்றும் அவருடைய வாழ்க்கைமுறை அனைத்தும் அமெரிக்காவில்தான். எந்த வகையில் 'நமக்கு பெருமை'? விண்கலத்தில் சென்றபொழுது பகவத் கீதையும், சமோசாவும் எடுத்துச் சென்றதாலா?

அதேபோல் மனோஜ் சியாமளன். பிறந்தது புதுச்சேரியில். மற்றபடி அவருடைய வாழ்க்கைமுறை அனைத்தும் அமெரிக்காவில்தான். அவரிடம் " 'சின்ன தம்பி மாதிரி' படங்களை மேற்கோள்காட்டி இந்திய திரைபடங்களை பற்றிய உங்கள் கருத்துனென்ன? இந்திய திரைப்படங்களை இயக்கும் எண்ணம் உண்டா?"' என்ற பேட்டியில் ..... அவர் சொன்னது "என்னால் அப்படி ஒரு படத்தை இயக்குவது ரொம்ப கஷ்டமான விசயம்! இந்திய மக்களின் இரசனைக்கு ஏற்றவாறு என்னால் திரைப்படங்களை இயக்குவது இயலாததொன்று" .

சில வாரங்களுக்கு முன்னால் நம் நாட்டிற்காக... நமக்காக இறந்த ஜீனியர் கமிஷன் ஆபிசர் (JCO) - சுபேதார் லால் (Naib Subedar Chunni Lal) க்காக நாம் பிராத்தனை கூட்டம் நடத்தினோமா? இல்லை அப்படி ஒரு செய்தியை நான் கவனிக்க தவறிவிட்டேனா? அவருடைய பெயரில் ஏதேனும் விருது கொடுக்கும் எண்ணம் நம் அரசாங்கத்திற்கு உண்டா? ம்ம்.. அவர் அமெரிக்காவில் வளர்ந்து ஈராக் போருக்கு சென்று உயிர் துறந்திருந்தால்தான் நமக்கு பெரிய விசய்மாக இருந்திருக்குமோ?

சரி.... 'பெரிய தலைவர்கள்'தான் கேட்கவில்லை.. பெரிய கடவுளாவது கேட்கட்டும் என்று நம் இலங்கை சகோதர, சகோதரிகளுக்கு பள்ளிகளில் தினமும் பிராத்தனைகூட்டம் நடத்திருப்போமா?

மகேந்திரன் போன்ற இயக்குநர்களை நம்மால் ஏன் கொண்டாட முடிவதில்லை? MSV போன்ற கலை<>ர்களுக்கு ஒரு முறைகூட தேசிய விருது கிடைக்கவில்லையே? ஏன்?? வெளிநாட்டில் பிறக்காமல், இந்தியாவில் பிறந்த ஒரே காரணாத்தினாலா?

கன்னியாகுமாரியில் முதல் பெண் பேருந்து ஓட்டுநரை, ஜெயலலிதா ஊக்கப்படுத்தியிருந்தால் இன்று பல பெண்கள் அதில் ஆர்வம் காட்டிருப்பார்களே? ஏன் செய்யவில்லை?!

ம்ம்..வாழ்க்கையில் சில புதிர்கள் எப்பொழுதுமே புரிவதில்லை..!