Pages

காக்க.. காக்க...

ஏப்ரல் 26ம் தேதியுடன் நான்கு மாதம் முடிவடைகிறது. நொய்டா (நிதாரி கிராமம்) வழக்கு... அப்படின்னா....

  • இரண்டு வருடங்களில் 38 குழந்தைகள் (குறிப்பாக பெண் குழந்தைகள்) காணாமல் போகிறார்கள். அக்கிராம மக்கள் காவல்துறையிடம் முறையிடுகின்றனர். 'வழக்கம் போல்' காவல்துறை ....?!
  • மொகிர்தர் சிங் மற்றும் அவருடைய வேலையாள் சுரேந்தர் கோலி (எ) சதிஷ் குற்றவாளி என கைது செய்யப்படுகின்றனர். இதில் கோலி, ஒரு 'நெக்ரோஃபீலிக் (necrophilic)...18 பெண்களை பலாத்காரம் செய்து கொன்று, அந்த உடலுடன் அவன் செய்த செயல்கள்...மேலும் விவரங்களுக்கு, இங்கே.. (நன்றி, மங்கை!)
  • உ.பி. அரசாங்கம் 2 இலட்சம் முதல் 17 இலட்சம் வரை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவித்தொகை தருவதாக 'உறுதி' அளித்துள்ளது.
  • எதிர்கட்சி தலைவர், நிதாரி கிராமத்திற்கு சென்று 'பார்வை'யிட்டுள்ளார். பின் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், கவர்னருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், மாநிலத்தில் உடனே ஜனாதிபதி ஆட்சி வரவேண்டும் என மத்திய அரசை 'தாழ்மையுடன்' கேட்டுக் கொண்டுள்ளார்.
  • உண்மை என்ன என்று கேட்டு, மக்கள் போராட்டாம் நடத்துகின்றனர். காவல்துறை 'அடிதடி' நடத்தி மக்களை விரட்டுகிறார்கள். இறுதியில் CBI 'தலையிட்டு' விசாரனை நடந்து கொண்டு இருக்கிறது.

ஏப்ரல் 16ம் தேதி, ஒரு பைத்தியக்கார மாணவனால் வெர்ஜினியாவில் மாநிலத்தில் உள்ள Vtech-ல் ஒரு கொடூர .. சோக சம்பவம்.... 32 பேர் பலியானார்கள்.

  • காவல்துறை உடனே விரைந்துவந்து தேவையான உதவிகளை செய்கிறார்கள்.
  • அங்கு நடக்கின்ற ஒவ்வொரு நிகழ்வும் மக்களுக்கு பத்திரிக்கை மற்றும் மீடியா மூலம் தெரியப் படுத்தபடிகிறது.
  • அடித்த நாள் நடக்கவிருக்கும் பட்டமளிப்பு நிகழ்சியில், நாட்டின் ஜனாதிபதி கலந்து கொள்வதாக செய்தி வருகிறது. கலந்தும் கொள்கிறார்.
  • அந்த பட்டமளிப்பு நிகழ்வில் நாட்டின் ஜனாதிபதி, மதத் தலைவர்கள், எழுத்தாளர்கள் என பலரும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு...... மக்களுக்கு ஆறுதலும், நம்பிக்கையும் கொடுக்கின்றனர்.
  • அந்நாட்டின் தேசியக் கொடி அரைகம்பத்தில் பறக்கிறது.
  • நாடே அந்த சோகத்தை உள்வாங்குகிறது. யாருக்காக.... ? எதற்காக..?
  • பலியானவர்கள் அனைவரும் இந்த நாட்டை சேர்ந்தவர்களா? இல்லை......பின் எப்படி...?
  • இதே கொடூரம், மீண்டும் ஒரு முறை நடக்காமல் இருக்கு என்ன செய்யாலாம் என ஆய்வாளர்களும், சட்ட வல்லுனர்களும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

இரண்டு கொடூர சம்பங்கள். அதற்குப்பின் நடந்த நிகழ்வுகள் முற்றிலும் வெவ்வேறானவை. ஏன் இந்த முரண்பாடு?

ஒரு அரசாங்கம் தன் மக்களை எவ்வாறு நடத்துகிறது...மதிக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணமா?

ஒரு குடும்பத்தில உள்ள குழந்தைகளை முதலில் அந்த பெற்றோர்கள் மதித்து நடத்தவில்லையென்றால் ... பின் அந்த குழந்தைகளை யார் மதிப்பார்கள்? அந்தக் குழந்தைகளுக்கு வீட்டின் மேல் எவ்வாறு மதிப்பு வரும்? எங்கு மரியாதை கிடைக்கிறதோ அங்கேதானே போவார்கள்? இதில் யாரை குறை சொல்வது?

'இந்த கொடூர சம்பவத்தில், உண்மைய கண்டறிய ஆளும் கட்சியுடன் நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்' என ஒரு எதிர்கட்சி தலைவரால் ஏன் கூற முடியவில்லை?

மத்தியிலும், மாநிலத்திலும் ஆளுபவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் சொன்ன ஆறுதலும், நம்பிக்கையான செய்திகள்தான் என்ன? பாதிக்கப்பட்ட மக்கள் படித்தவர்களா? அவர்களுக்கு 'நெக்ரோஃபீலிக்' னா என்னவென்று தெரியுமா? அதை அவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள். பொருளவில் மட்டுமல்ல... மனதில் ஏற்படித்திய வலி, அதிலிருந்து எப்படி வெளிவரவேண்டும் என ஆலோசனைகள் (கவுன்சிலிங்) உதவி செய்தார்களா?

ம்ம்ம்....'உதவித்தொகை அறிவித்ததா'....! அடப்பாவிகளா, அந்த விலை மதிக்கமுடியாத உயிர்களுக்கு நீங்கள் யார் விலையை தீர்மானிப்பதற்கு....? அந்த மக்கள் அதையா உங்களிடம் எதிர் பார்த்தார்கள்? இது கடைசி செய்தியாகவல்லவா வந்திருக்க வேண்டும்.

'அங்கு நடந்தவற்றை ஒரு நாடகமாக மேடை ஏற்ற அந்த கிராம குழந்தைகளை தயாராக்கி வருகிறார்கள்' என்ற செய்தியை படித்த பொழுது மனது ஏதோ செய்கிறது. இப்படிதான் இந்த செய்தியின் முக்கியதுவத்தை நமக்கு சொல்ல வேண்டி இருக்கிறது. இல்லையென்றால், அபிஷேக்-
ஐஸ்வர்யா ராய் திருமண செய்தி நமக்கு தலைப்பு செய்தியாய் இருக்குமா?

பாரதி, உனக்கும் உன் பிராத்தனைக்கும் தலைவணங்குகிறேன்!

"மனதி லுறுதி வேண்டும்,
வாக்கினி லேயினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்;
தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும்.
கண் திறந்திட வேண்டும்,
காரியத்தி லுறுதி வேண்டும்;
பெண் விடுதலை வேண்டும்,
பெரிய கடவுள் காக்க வேண்டும்,
மண் பயனுற வேண்டும்,
வானகமிங்கு தென்பட வேண்டும்;
உண்மை நின்றிட வேண்டும்."

தலைமகன்



நம் ஜனாதிபதி, அவுல் பகிர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம் (Dr. A.P.J. Abdul Kalam ) அவர்களின் பதவிக்காலம் ஜீன் 2007 ம் மாதம் நிறைபெறுகிறது. அடுத்து ஜனாதிபதி யார் வர வாய்ப்பு அதிகம் என்ற செய்திகளும் வர ஆரம்பித்துள்ளன. நம்ம SurveySan-னும் ஒரு சர்வே போட்டுருக்காறு.



நம் அனைவருக்கும் தெரிந்தது போல், அப்துல் கலாம் சிறந்த விஞ்ஞானி... அமைதியானவர்....நல்ல தலைவர்... ரோல் மாடல். மாணவர்களுடன் நாட்டின் வளர்ச்சியையும், நம் கடமையும் பகிர்ந்து கொள்பவர். 'கனவு காணுங்கள்' என்ற நல்விதையை விதைத்தவர். இப்படி மற்றவர்களை விட தனித்தன்மை கொண்டவர். ஆனால்....

மற்ற ஜனாதிபதி செய்வதைப் போல, பீகார் அரசை கலைப்பதற்கு நடு இரவில் இரஷ்யாவில் இருந்து அனுமதி அளித்தவர். இதனால் மறு தேர்தல் நடந்தது. இதனால் எவ்வளவு செலவானது என்பதை நம்மால் கணிக்க முடியும். இதுபோல சில நிகழ்ச்சிகளை சொல்லலாம். 'நம் நாட்டில் ஒரு ஜனாதிபதிக்கு அவ்வளவுதான் அதிகாரம். அதற்கு மேல் அவரால் என்ன செய்ய முடியும்..? ' நிற்க!

'கனவு காணுங்கள்' என்ற கருத்து மாணவர்களுக்கு மட்டும்தான..? ஏன் நம் நாட்டை நிர்வகிக்கும் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளுக்கு வலியுறுத்த வேண்டாமா? பதவியில் இருக்கும் ஒருவர் வலியுறுத்தி இருந்தால், நடைமுறை படுத்த தேவையான முயற்சி செய்திருந்தால் ..... குறைந்தபட்சம் ஒரு மாற்றத்திற்கான முதல் படியாக இருந்துருக்குமே... (ம்ம்ம்... 'இவங்களைலாம் மாத்த முடியாது..... எதிர்கால இந்தியாவை செதுக்க போகும் சிற்பிகளிடம் சொல்வதுதான் சிறந்தது' என்று நினைத்தாரோ எண்ணவோ ..?!)

T.N. சேஷன், தேர்தல் ஆணையாளரா இருந்தார். அவர் வரும்வரை, இந்த பதவிக்கு இவ்வளவு அதிகாரங்கள் இருக்கிறதா-னு நமக்கு... எனக்கு தெரியாது. அனைத்து கட்சிகளும், தேர்தல் ஆணையத்திடம் 'கணக்கு' காட்டினார்கள். இரவு பத்து மணிக்கு மேல் ஒலி பெருக்கியின் 'தொல்லை' இல்லை. அடையாள அட்டை....னு ஒரு பட்டியல் போடலாம். இன்றைக்கும் நடைமுறைக்குள்ளது. அதுபோல ஒருவர் ஜனாதிபதியாக வந்து என்னென்ன அதிகாரங்கள் இருக்கிறது... அல்லது அதிகாரத்தை நல்ல முறையில் நடைமுறை படுத்தும்வரை நமக்கு 'உண்மை' தெரியப்போவதில்லை....

வெளிநாடு வந்ததுக்கப்புறம் வெளியிடங்களுக்கு செல்லும்பொழுது ரோட்டில் சிறுநீர் கழிப்பதில்லை. கழிப்பிடம் பார்த்து செல்கிறோம்.
குப்பைகளை வெளியே எறிவதில்லை. குப்பைதொட்டி எங்க இருக்குனு பார்த்து அதில போடுறோம்.
நடு இரவு காரில் செல்லும் பொழுதுகூட சாலைவிதிகளை மதிக்கிறோம்.

ஏன்..? முதலில் அரசாங்க சட்டம் பின்பு தனிமனித ஒழுக்கம்.

ரோட்டில் சிறுநீர் கழித்தாலோ, குப்பைகளை வெளியே எறிந்தாலோ, சாலைவிதிகளை மதிக்கிவில்லையென்றாலோ ...... கண்டிப்பாக அபராதம் உண்டு. அது அந்நாட்டின் சட்டம். முதலில் 'சட்டம்' என்று பின்பற்ற ஆரம்பித்து அதுவே நமது பழக்கமாகிறது. அதனால்தான், காவல்துறை அதிகாரிகள் இல்லையென்றாலும், சாலைவிதிகளை மதிக்கிறோம். தேவையான இடங்களில் கழிப்பிடம், குப்பைதொட்டிகளும் இருக்கும்....சுத்தமாகவும்... என்பதும் ஒர் உண்மை.

இதேபோல், நம் ஜனாதிபதி நினைத்திருந்தால் அரசு இயந்திரங்களை மாற்றுவதற்கு ஒரு முயற்சி எடுத்திருக்கலாம். 'கனவு காணுங்கள்'னு மாணவர்களுக்கும் மட்டும் இல்லாமல் ஒவ்வொரு அரசு துறைக்கும் ஒரு திட்டம் கொண்டுவந்து நடைமுறை படுத்த முயன்றிருக்கலாம்.



ஒரு மாற்றத்திக்குவது T.N. சேஷன் ஜனாதிபதியாக வந்தால் இப்படி ஒரு வாய்ப்புள்ளதோ? இல்லை வேற யார்தான் இருக்கா? சட்டென்று யாரும் நினைவுக்கு வரவில்லை.......

வாழ்க்கை



அமெரிக்காவில் உள்ள வெர்ஜினியா பல்கலைக்கழகத்தில் (VTech) ஏப்ரல் 16ம் தேதி நடந்த துப்பாக்கி சூட்டில் 32 பேர் கொல்லப்பட்டனர். இரண்டு பேர் என்றுதான் செய்தி ஆரம்பமானது.

முதலில் இந்த செய்தியை படித்தபோது... அமெரிக்காவில் இது ஒரு சம்பிராதயம் தான... வருடத்திற்கு ஒரு முறையாவது இதுமாதிரி நடக்கிறது தான எண்ணம் வந்தது. ஆனால் அந்த செய்தியின் ஆழம் தெரிய வந்தபோது மனதிற்குள் ஒரு கலவரம்...

அந்த 32 பேரில் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த பேராசிரியர் லோகநாதனும் (51), இந்திய மாணவியான மினாள் பஞ்சால் (20) என்பவரும் அடக்கம். இவர்கள் மற்றும் இந்த கோர சம்பவத்தில் பலியானவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.... வேண்டிக் கொள்வோம்....

இருபத்தி நான்கு மணி நேரத்தில் இவர்களைச் சார்ந்த அன்பானவர்களின் வாழ்க்கை மாறிப்போனது. எதிர்பாராத இழப்புகளை ... அந்த செய்தியை உண்மையென்று நம்பவே மனதில் வலிமை வேண்டும்.

பல கனவுகளுடனும், இலட்சியங்களுடனும் கல்லூரி வாழ்க்கையில் அடி எடுத்து வைத்த அந்த இளம்தளிர்களின் மரணம்...

பேராசிரியர் லோகநாதன் (51) அவருக்கு 21, 19 வயதில் 2 மகள்கள். எங்கோ பிறந்து, வளர்ந்து பொருள் தேட இங்கு வந்து அவருக்கு நேர்ந்த கொடுரம்..

ரோமேனிய நாட்டைச் சேர்ந்த 73 வயது பேராசிரியர், கொலோகோஷ்ட் (Holocaust) survivor. சிறந்த Aeronautical Engineer. ஒரு பைத்தியக்காரனின் கையில் இவருடைய முடிவு...



இவர்களுக்கு ஏன் இவ்வாறு நடந்தது? எதற்கு நடந்தது? இதுபோல பல கேள்விகளுக்கு பதில் கிடைக்கப் போவதில்லை. வாழ்க்கை சில நேரங்களில் புரியாத புதிர்தான். ஆம்... அந்த புதிர்களுக்கு பதில் தெரியாமல்தான் பயணித்து கொண்டிருக்கிறோம்.

எண்ணிப்பார்த்தால், ஒவ்வொன்றிக்கும் விடைதேடி அலைய தேவையில்லை என்றுதான் தேன்றுகிறது. ஏதோ ஒன்று.... சில நிகழ்வின் மூலமாக அல்லது சக மனிதர்களின் வழியாக.... 'வாழ்க்கை வாழ்வதற்கே' என்று சொல்லிக் கொண்டிருக்கிறது......
பலியான ஒவ்வொரின் குடும்பத்தையும் பெரிய கடவுள் காக்கட்டும்.

வெர்ஜினியா பல்கலைக்கழகம் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பும். மொட்டுக்கள் மலராகும்....

'சுற்றும் வரை பூமி
சுடும் வரை நெருப்பு
போராடும் வரை மனிதன்
நீ மனிதன்'

என்ற வைரமுத்தின் வரிகள் நினைவுக்கு வந்து செல்கிறது.

அழகே, உன்னை ஆராதிக்கிறேன்!

அழகுனு சொன்னவுடன் என் நினைவுக்கு வர்றது...
'கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு
....'
வைரமுத்துவின் பாடல் வரிகள் தான்.

நினைவுக்கு வரும் முதல் ஆள்னா... என் அம்மா முகம். முகத்திற்கு வையில்லாத 'சாயம்' பூசினதில்லை.... அதிகமான அலங்காரம் பண்ணுதல்ல... வெளிய எங்க கிளம்புனாலும் எங்களுக்கு மேல முத ஆளா கிளம்பி இருப்பாங்க. அந்த எளிமையான அழகு! நமக்கு எது வேணும்னாலும் அப்பாகிட்ட தூது போற முத ஆள் அம்மாதான்... அப்பாகிட்ட இருந்த பயம் அம்மாகிட்ட இருந்ததில்ல... எங்க அம்மா சின்ன வயசுல எடுத்த புகைபடங்களை மட்டும் இல்ல இப்ப எடுத்த படங்களைகூட பார்த்துட்டே இருக்கணும் தோணும்.

இதுக்கும் மேல, யாரையும் எளிதா மன்னிக்க கூடிய அந்த மனசு ரொம்ப பிடிக்கும்.

இடம்னா, அது நான் திருச்சியில் படிச்ச கல்லூரிதான். 'ஆறு' வருடங்களுக்கும் மேலான ஒரு பந்தம். வாழ்க்கையில நான் கத்துக்கிட்ட எல்லா நல்லா விசயங்களுக்கும் ஆரம்பம் அதுதான் . அந்த வளாகத்திற்குள் இருந்தாலே மனசுல்ல அப்படி ஒரு அமைதி. சும்மா ஒரு நடை போனா, நேரம் போறதே தெரியாது. என் அப்பாவுக்கு நான் அங்க படிக்கணும் ஒரு ஆசை ... அதுக்கும் மேல 'லட்சியம்'னு கூட சொல்லலாம்... .. என் வாழ்வில் எனக்கு கிடைத்த நண்பர்கள், சந்தித்த மனிதர்கள், அனுபவங்கள்...... எல்லாமே வாழ்க்கை பாடம்தான். அந்தக் கல்லூரி இப்பொழுது நினைத்தாலும் அழகு.

(அட, எந்த கல்லூரி-ப்பா ...? ) அதாங்க... நம்ம ஜனாதிபதி அப்துல் கலாம் படிச்ச கல்லூரி.

கல்லூரி விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் கன்னியாகுமரி, நாகர்கோவில், கோட்டயம் சென்ற அந்த அழகான நிகழ்வுகள் . அப்பொழுது சென்ற இரயில் பயணங்கள் .... குறிப்பாக புகைவண்டியுடன் போட்டி போட்டு ஓடும் மரங்களை பார்த்துக்கொண்டே நண்பனுடன் படிக்கட்டில் உட்காந்து சினிமா, விளையாட்டு, வாழ்க்கை என பேசிய அந்த தருணங்கள் .... அவர்கள் குடும்பத்தில் ஒருவனாக இருந்து கொண்டாடிய பொங்கல், தீபாவளி, கிறிஸ்மஸ் விழாக்கள் ...என அந்த நிகழ்வுகளை நினைத்தால் இப்பொழுதும் அழகே!

வேலை, காதல்-கல்யாணம், எதிர்பார்த்த பிறப்புகள்/சந்தோஷங்கள், எதிர்பார்க்காத இழப்புகள்/வலிகள் என காலச் சுனாமியால் இப்பொழுது எனது மனதில் மட்டுமே இருக்கும் அந்த நினைவுகள்/காயங்கள் நட்பின் அர்த்ததை சொல்கின்றன-- எனக்கு மட்டுமா இல்லை என் நண்பர்களுக்குமா... ?

கல்யாண நாள் அன்று என் மனைவி கொடுத்த பரிசு...(டைட்டன்) கைக்கடிகாரம். என்னுடைய சம்பளத்தில நான் முதலில் வாங்கியது ஒரு கடிகாரம்தான் . அதுக்கப்புறம் பரிசாக எத்தனை கைக்கடிகாரம் கிடைத்தாலும், நான் முத முதலா வாங்கின அந்த கடிகாரத்ததான் கட்டிருந்தேன் - என்னவளிடம் இருந்து கிடைக்கும்வரை. அதுல என்ன... விசேஷம்னா என் மனைவியும் அவளுடைய முதல் சம்பாத்தியத்தில் வாங்கியதாம்.

என் மகள் செய்கின்ற ஒவ்வொன்றும் அழகான குறும்புகள்தான். அவள் 'அம்மாவாகி', அவள் அம்மா 'kid' ஆகி அவள் 'kid'யை மிரட்டுவதாகட்டும், அவள் 'teacher'ஆகி, நாங்கள் 'students' என்று நடக்கும் 'விளையாட்டுகள்' ஆகட்டும்... எல்லாமே அழகான குறும்புகள்தான்.

ம்ம்ம்ம்... கடைசியாக, எனக்கு கிடைக்காமலே போன அழகுனா .... அன்னை தெரசாவை நேரில் சென்று 'தரிசனம்' செய்யனும்-னு எண்ணிய அந்த அழகான தருணங்கள். என்னுடைய நீண்ட நாள் கனவும்கூட .. அது கனவாவே ஆயிடுச்சி... புகைபடங்களில், இப்ப பார்த்தாலும் கருணை வழியும் அந்த முகம். வாழ்க்கையின் பல அர்த்தங்களை சொல்லும்.

எல்லாவற்றிக்கும் மேலாக, மனிதனை 'மனிதனாக' மதிப்பவர்கள் எல்லாருமே அழகானவர்கள்தானே?!

நான் அழைக்கும் அழகானவர்கள்:

1. ஜோ / Joe
2. மணிகண்டன்
3. செல்வநாயகி

பி.கு: இந்த அழகு விளையாட்டை ஆரம்பித்து வைத்த "இலவசக்கொத்தனார்கும்",
என்னையும் இந்த விளையாட்டுக்கு அழைத்த "தமிழ்நதிக்கும்",
காட்டாறுக்கும் நன்றி!!

புதிய பூமி

"Global Warming " பத்தி அல்கோர் என்னதான் சொல்றாருனு தெரிஞ்சிக்க அவர் எழுதின "An Inconvenient Truth" புத்தகம் வாங்கி வைச்சிருக்கேன் (எப்ப படிப்பேன்னு எனக்கே தெரியல!). அல்கோர் எடுத்த டாகுமுண்டரி படத்தையாவது பார்க்கணும். போன வாரம் கூட 'டைம்' பத்திரிக்கைல முதல் பக்கத்துல வந்திருந்தது.

ராதாஸ்ரீராம் "Global Warm(n)ing " பத்தி ஒரு பயனுள்ள பதிவு ['டைம்' பத்திரிக்கைல படித்ததா] எழுதி இருந்தாங்க. அந்தப் பத்திரிக்கைல ஒரு interestingஆன தகவலும் பார்த்தேன்.

2004ல, UPSகிற கொரியர் சர்வீஷ் நிறுவனம் ஒரு வித்தியாசமான முயற்சி பண்ணிருக்காங்க!
UPS வேன்/டிரக் ஓட்டுநனர்கள் இடது பக்கம் போகாம, முடிந்தவரை வலது பக்கமே திரும்பியே கடிதங்கள்/பார்சல்களை டெலிவர்(deliver) பண்ணிருக்காங்க.

காரணம், இடது பக்கம் திரும்பிறப்ப சிக்னலுக்கு காத்துகிட்டு இருக்கிறதுனால வருடத்திற்கு மில்லியன் டாலர் எரிபொருள் (fuel) செலவாகுதாம். அதனால அவுங்களே ஒரு மென்பொருள் (software) எழுதி, முடிந்தவரை வலது பக்கம் திரும்பற மாதிரி வழி (route) கண்டுபிடிச்சி அதை பயன் படுத்திகிட்டு இருக்காங்க!

இதனால, நியூயார்க் நகரத்தில மட்டும் ஏறக்குறைய 1000 மெட்டிக் டன் CO2வை குறைச்சிருக்காங்க. இதுவரை, 83 சதவிதம் நடைமுறை படித்திருக்காங்களாம். இன்னும் ரெண்டு வருடத்தில அமெரிக்கா முழுவதும் நடைமுறைக்கு கொண்டுவர திட்டமாம்.

Hope they are heading to 'right' direction!

நம்ம எளிதா 'கடைபிடிக்ககூடிய' ஒரு விசயத்தில இந்த தகவலும் இருந்தது....

Check your tires!

* கார் engineயை ஒழுங்கா tune-up பண்ணாலே 4% க்கும் மேல காரின் எரிபொருளை சேமிக்கலாம்-னும்,

* Air filter சரியா காலஇடைவெளியில மாத்திருந்தா, 10% காரின் எரிபொருளை சேமிக்கலாம்-னும்,

** 20 கி.மீ குடுக்கிற காரு, 24 கி.மீ குடுக்குமாம்.


முயற்சி செய்து பார்ப்போம்!
முயற்சி திருவைனையாக்கும்!!


பி.கு: 1. விக்கிபசங்க "Global Warming - ஒரு பாமரனின் பார்வையில்" ஒரு சிறப்பான பதிவு போட்டிருக்காங்க!
2. ஏப்ரல் 22 - பூமி நாள்.

வேட்டையாடு விளையாடு

எனது (நான்கு வயது) மகளுடன் தியேட்டரில் 'பார்த்த' முதல் தமிழ் திரைப்படம். ;(

ஒரு சாயந்திரம் என் நண்பர் தொலைபேசியில் 'இன்று இரவு பத்து மணிக்காட்சிக்கு இரண்டு டிக்கெட் இருக்கு வர்றீங்களா?'-னு கேட்க..... ஆஹா... கமல் படம்.....அதுவும் முதல் நாள் வேற... உற்சாகத்தில் 'கண்டிப்பா வந்துடுறோம்.'-னு சொல்லிட்டேன். 'என்னங்க.... படம் எப்படிங்க? ரொம்ப voilentஆ இருந்துச்சின்னா குழந்தைய கூட்டிட்டு எப்படி போறது'-னு என் மனைவி கேட்டவுடன்தான்... 'அடடா... படம் எப்படி இருக்கும்?'-னு கேட்க மறந்துட்டோமே?-னு தோணிச்சி.

சரி.. போலாம்.. அங்க போய் பார்த்துக்கலாம்-னு போயிட்டோம். எங்களைவிட என் பொண்ணு ரொம்ப ஆர்வமாயிருந்தா. தியேட்டர் வாசலில கொஞ்சம் குழந்தைகளை பார்த்தவுடன் கொஞ்சம் நிம்மதி. படம் ஆரம்பமானது.

முதல் காட்சிலேயே வச்சாங்க ஆப்பு... இராகவன் வந்தாரு... அதுக்கப்புறம்தான் நமக்கு கதைதெரியுமே.... என் பொண்ணை பார்த்து, 'மடியில படுத்துக்க.. பயமாயிருக்கும்.. பார்க்கவேண்டாம்'-னு சொல்ல அவ எனக்கு மேல ஆர்வமா பார்க்கிறா.... ஆஹா..இது என்னட வம்பாபோச்சி நினைச்சிகிட்டு ... 'சரி... வெளியே போய் chocalate வாங்கிட்டு வரலாம்'-னு கூப்பிட்டா... 'இருக்கப்பா ... படம் முடிஞ்சதும் வாங்கித்தாங்க'-னு எனக்கு 'அறிவுரை'!! அப்புறம் எப்படியோ சமாதனம் சொல்லி தியேட்டருக்கு வெளிய வந்து அவ கேட்கிறத வாங்கி குடுத்து, நானும் அவளும் கத பேசிக்கிட்டு இருந்தோம். அவ இதுவரை பார்த்த காட்சிகள கேள்விகளால் 'வேட்டை'யாட, நான்.. நம்ம கிரிக்கெட் teamபோல அவ கேள்விக்கு 'திறமையா' பதில் சொல்லி 'விளையாடி'கிட்டு இருந்தேன்.

கொஞ்ச நேரம் கழித்து... சரி... இப்ப என்ன காட்சி ஓடுது-னு உள்ள போனோம்.

திருநெல்வேலி ரோட்டுல.. கமலும். கமலினியும்... 'பார்த்த நாள் முதலாய்...'-னு பாடிட்டு (பைக்கில போய்கிட்டு) இருந்தாங்க.... பாட்டு முடிந்தவுடம், மறுபடியும் வெளிய வந்து எங்க கதய தொடர்ந்தோம். வழக்கமா... இரண்டு கதை சொன்னா தூங்கிருவா.. இன்னிக்கு பார்த்து அந்த அறிகுறிய காணோம். இடைவேளை விட்டு மறுபடியும் படம் ஆரம்பமானது. அதுக்கப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சி தூங்கிட்டா.

எனக்கு சில எண்ணங்கள்... படத்துல ஏன் இவ்வளவு violence? அது சரி... தமிழ் படங்களில இதுமட்டும் விதிவிலக்கா என்ன.... இப்ப வர படங்கள எதிலதான் violence கம்மியா இருக்கு? ஹாலிவுட் படங்களிலயும் இவ்வளவு violence உண்டுதான். ஆனா, அங்க varietyஆ படங்கள் வருது. த்ரில்லர், காமெடி, குடும்பம், குழந்தைகளுக்கு-னு விதவிதமா வருது. Psyco படம்னா இவங்களைப்போல யாரும் கொடுரமா காண்பிக்க முடியாது. உதாரணத்துக்கு 'The Silence of the Lambs' .. இப்படி ஒவ்வொன்லேயும் ஒரு பெரிய பட்டியலே போடலாம். ஆனா இந்த மாதிரி படங்களை சின்ன பசங்க பார்க்க முடியாது. தியேட்டரில அதற்கு அனுமதியும் கிடையாது.

நம்ம ஊரில எப்பவும் ஒரே மாதிரியான படம்தான்.. இந்த மாதிரி படங்களலாம் நம்ம குழந்தைகள் பார்த்தாங்கனா... நமக்கு அதலாம் ஒரு பெரிய விசயமே கிடையாது. அப்படி ஒரு விழிப்புணர்வு வந்திருக்காகிறதாகிறதே தெரியல....

எல்லாமே நமக்கு take it easyதான்...
அலட்சியம்...
அக்கறைஇன்மை..
எல்லா பிரச்சனைகளியும் அரசியல்...

இல்லனா.. நொய்டாவில நடந்த பயங்கரம்லாம் நமக்கு (ம் mediaவுக்கும்) ஒரு செய்திமட்டும்தான.... எந்த பிரச்சனைக்கு எப்படி, எவ்வளவு முக்கியத்துவம் குடுக்கணும்-னு நமக்கு தெரியலையா?

விளையாட்ட விளையாட்டாவும் எடுத்துக்க மாட்டோம்.. பிரச்சனைய பிரச்சனையாவும் எடுத்துக்க மாட்டோம்... இதுதான் நம்ம பலவீனமா?

....ம்ம்ம்ம்

சரி....ன்னு தியேட்டருக்குள்ளா போனா கமல் நியூயார்க்-ல 'யாரையோ' சுடுறதுக்கு ஓடிக்கிட்டு இருந்தாரு. எப்படியோ நமக்கு இனிமேல் படம் புரியப் போறதுல்ல..னு நினைச்சிகிட்டு படம் முடியும் வரை இருந்துட்டு வீட்டுக்கு வந்தோம். 'இனிமேல் படம் எப்படி-னு தெரியாம குழந்தைய கூட்டிடு போகக்கூடாது'-னு நானும் என் மனைவியும் முடிவு பண்ணிருக்கோம்.

ஒருவாரம் கழித்து, 'பார்த்த நாள் முதலாய்...' பாடல் வீட்டுல பாடிக்கிட்டு இருக்கிறப்ப .. விளையாடிகிட்டு இருந்த பொண்ணு வேகமா வந்து, முழு பாடலையும் கேட்டுட்டு அதுக்கப்புறந்தான் விளையாட போறா.. இப்பொழுதும் தொலைகாட்சில இந்த பாடல் வந்தா முழுவதும் பார்த்துட்டு/கேட்டுட்டு தான் போறா?

இதுதான் கலிகாலமோ?