Pages

தியானம்: கோபத்தை விலகி நின்று கவனி!

நடனம், சிரிப்பு, உடலசைவு, மூச்சுவிடுதல், மூச்சைக் கவனித்தல், ஒளியைக் கவனித்தல்....என்ன இது? ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத விஷயங்களாக இருக்கின்றனவே என்று யோசிக்கிறீர்களா? தொடர்பில்லாத விஷயங்கள் இல்லை இவை. இவையெல்லாம் தியானப் பயிற்சிகள்.

சென்னையில் ஓúஸô சுராஜ் மெடிடேஷன் சென்டரை நடத்தும் ஸ்வாமி பரிபூரானந்த் கடந்த 24 ஆண்டுகளாக இத்துறையில் பரிச்சயம் உள்ளவர். புணேயில் உள்ள ஓஷோ கம்யூன் இன்டர்நேஷனலில் இதற்காகப் பயிற்சி பெற்றவர். இந்தத் தியானப் பயிற்சிகளைக் கடந்த 16 ஆண்டுகளாகப் பிறருக்கு அளித்து வருகிறார்.

இந்தப் பயிற்சிகளினால் என்ன நன்மை? இப்படிப்பட்ட பயிற்சிகள் எல்லாம் இந்த நவீனயுகத்தில் தேவைதானா? என்று அவரிடம் கேள்விகளை அடுக்கினோம். கொஞ்சமும் பதட்டப்படாமல் அவர் அளித்த பதில்கள் உங்கள் பார்வைக்காக....

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் மெüனம் என்று பொருள். இந்த மெüனம் நமது தாயின் கருவறையில் இருக்கும் போது நம்முடன் இருந்தது. மனிதன் பிறந்து வளர வளர இந்த மெüனம் மனிதனுக்குள் மறைந்து விடுகிறது. ஆனால் இந்த மெüனம் எல்லாருக்குள்ளும் இருக்கிறது. அது புதிதாக ஏற்படுத்தப்படுவது அல்ல. மதரீதியான காரணங்களாலும், வேலைரீதியான காரணங்களாலும், குடும்பரீதியான காரணங்களாலும் நமது மனதில் அழுத்தம் சேர்கிறது. இந்த அழுத்தத்தின் காரணமாக நமது மனதில் குடி கொண்டிருக்கும் மெüனத்தை நம்மால் உணர முடியவில்லை. அந்த அழுத்தங்களை வெளியேற்றி நம்முள் உறைந்திருக்கும் மெüனத்தை வெளிக் கொண்டு வருபவைதான் தியானப் பயிற்சிகள்.

மனம் எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கிறது. மனதைத் தேவையான போது இயங்கவிட்டு பிற நேரங்களில் அதை நிறுத்தி வைக்க முடியும். அதற்குப் பயன்படுவது தியானப் பயிற்சிகள்.

தியானப் பயிற்சிகள் என்று சொல்கிறீர்கள். எத்தனைவிதமான தியானப் பயிற்சிகள் உள்ளன?

ஓஷோ 112 "விஞ்ஞான பைரவ தந்த்ரங்'களைச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். ரமண மகரிஷி நோய்வாய்ப்பட்டிருந்த போது அவர் உடல் வேறு; உணர்வு வேறு என்று இருக்க முடிந்திருக்கிறது. ஓஷோ சொன்ன 112 தந்த்ரங்களில் இதுவும் அடங்கியிருக்கிறது. இந்த 112 தந்த்ரங்கள் எல்லாருக்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது. நாங்கள் சொல்லித் தருபவற்றை 21 நாட்கள் தொடர்ந்து பயிற்சி செய்து அதில் உங்களுக்குப் பொருந்திப் போகும் பயிற்சிகளை மட்டும் தொடர்ந்து மூன்று மாதம் செய்துவர வேண்டும். அதன்பின் நேரம் கிடைக்கும் போது - தோன்றிய போது செய்யலாம்.

நாங்கள் டான்ஸ், சிரிப்பு தியானம், நாதப்ரம்மம் தியானம், உடலசைவு தியானம்(குண்டலினி தியானம்), மூச்சுவிடுதல் தியானம், ஹு மந்த்ரா, மூச்சைக் கவனித்தல் போன்ற பயிற்சிகளைக் கற்றுத் தருகிறோம். ஒரு நாள் தியானப் பயிற்சி எனில் குறைந்தது 5 தியானப் பயிற்சிகளைக் கற்றுத் தருகிறோம்.

தியானப் பயிற்சிகளினால் என்ன பயன்?

இன்று வாழ்க்கையில் நெருக்கடி அதிகமாக இருக்கிறது. கால்சென்ட்டர் போன்ற பணிகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு டென்சன் அதிகம். அவர்களுக்கு வருமானமும் அதிகம். அவர்களில் பலர் நெருக்கடிகளைச் சமாளிக்கப் போதையில் மூழ்குகிறார்கள். பல தீய பழக்கங்களைக் கற்றுக் கொள்கிறார்கள். அவர்களுக்கு ஏற்படும் டென்சனைக் குறைக்கவும், தீய பழக்கங்கள் ஏற்படாமல் தடுக்கவும் இந்தத் தியானப் பயிற்சிகள் உதவும்.

ஓஷோவின் தியானப் பயிற்சிகள் என்றில்லை. பொதுவாக எந்தத் தியானப் பயிற்சிகளும் நல்ல பலன்களைத் தரவே செய்கின்றன. நான் சொல்லும் தியானப் பயிற்சி மட்டும்தான் சரியானது என்று சொல்ல மாட்டேன். நான் சில தியானப் பயிற்சிகளைப் பிறருக்குக் கற்றுக் கொடுக்கிறேன். விருப்பமுள்ளவர்கள் அவற்றை ஏற்றுக் கொள்ளலாம். இல்லையென்றால் விட்டுவிடலாம்.

பிற தியானப் பயிற்சிகளுக்கும் நீங்கள் தரும் தியானப் பயிற்சிகளுக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம் என்ன?

இதில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. பிற தியானப் பயிற்சிகளில் தியானம் என்றால் அதன் மூலம் எதையாவது அடைய வேண்டும் என்று இலக்கு வைத்திருப்பார்கள். அப்படிப்பட்ட இலக்கு எதுவும் எங்களின் பயிற்சியில் இல்லை. புதிதாக அடைய எதுவும் இல்லை. ஏற்கெனவே மனிதனுக்குள் இருக்கிற மெüனத்தை மனிதனுக்கு ஞாபகப்படுத்துவதுதான் இந்த தியானப் பயிற்சிகள். இந்தப் பயிற்சிகள் மனிதனுக்குள்ளிருக்கும் தேவையில்லாத அழுத்தங்களை வெளியேறுகின்றன.

பிற தியானப் பயிற்சிகளில் மனிதனுக்கு எது எது பிடிக்கிறதோ அதையெல்லாம் செய்யக் கூடாது என்பார்கள். மனிதனுக்குப் பிடித்ததைச் செய்யாவிட்டால் மனிதனாக இருந்து என்ன பயன்? நம்மை வருத்திக் கொள்வது தியானமல்ல. உண்ணா நோன்பிருந்து தியானம் செய்யும் போது மனதில் உணவைப் பற்றிய எண்ணமே இருக்கும். ஏனெனில் உணவு மனிதனின் உடல் தேவை. எனவே மனிதன் தன்னை வருத்திக் கொண்டு தியானம் எதுவும் செய்யக் கூடாது.

சமூகக் காரணங்களாலும் மற்றும் பலவிதக் காரணங்களாலும் ஏற்படுகின்ற பிரச்சினைகளை நீக்குவதற்கும் அவற்றிற்குத் தீர்வு காண்பதற்கும் முயற்சிப்பதுதானே சரி. அதை விட்டு விட்டு அந்தப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட மனிதன் தன் மனதளவில் அந்தப் பாதிப்பிலிருந்து மீள்வதற்கான தியானப் பயிற்சிகளைச் செய்வது சுயநலமில்லையா? சமூகப் பொறுப்பில்லாதத் தன்மையல்லவா?

சமூகம் என்பது யார்? பல தனிமனிதர்கள் எல்லாம் சேர்ந்துதான் சமூகம் உருவாகிறது. அந்தத் தனிமனிதர்கள் தங்கள் அளவில் மன அழுத்தம் இல்லாமல் இருந்தாலே அது சமூகத்திற்கு நன்மைதானே?

மேலும் சமூகத்தில் காணப்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை. அதற்கான வேலைகள் ஒருபுறம் நடக்கட்டும். அவரவருக்குரிய வகையில் அவற்றைச் செய்யட்டும்.
அந்த வேலைகளைத் தனிமனிதன் ஒருவன் சிறப்பாகச் செய்யவே இந்தத் தியானப் பயிற்சிகள் உதவும். எப்படி என்கிறீர்களா?

ஒரு சமூகப் பிரச்சினையைப் பற்றி உங்களுக்குக் கோபம் வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தக் கோபம் சரியானது. அதை அடக்க வேண்டியதில்லை. ஆனால் அதே சமயம் அந்தக் கோபத்தில் மூழ்கிவிடவும் வேண்டியதில்லை. அந்தக் கோபத்தை விலகி நின்று கவனிக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் கோபத்தைச் சரியானபடி கையாள முடியும். அவ்வாறு சரியானபடி கையாளும்போது பிரச்சினைகளை எளிதில் தீர்க்க முடியும். கோபத்தால் தேவையில்லாத பிரச்சினைகளும் ஏற்படாது.

கோபம் என்றில்லை, நமது எல்லா உணர்வுகளையும் கவனிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும். எந்த உணர்வையும் கட்டுப்படுத்தக் கூடாது. அதை அடக்கக் கூடாது. மாறாக அதைக் கவனிக்க வேண்டும். அதைக் கவனிக்கும் போது நல்லது கெட்டது தெரிய ஆரம்பித்துவிடும்.

கோபம் உட்பட பலவித உணர்வுகளையும் நெறிப்படுத்த முடியாத ஒரு மனிதன் சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பது எப்படி? அதற்கு எங்கள் தியானப் பயிற்சிகள் உதவும்.

மேலும் பலவிதக் காரணங்களால் மன அழுத்தத்திற்கு உள்ளான மனிதன் போதை போன்ற தீய பழக்கங்களில் ஈடுபடாமல் தடுப்பதே இந்தத் தியானப் பயிற்சிகளின் சமூகப் பங்களிப்பல்லவா?

உங்களைப் பின்பற்றினால் சமூகப் பிரச்சினைகளை எளிதில் தீர்க்க முடியும் என்கிறீர்களா?

எங்களைப் பின்பற்றுங்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஓஷோவே தன்னை யாரும் பின்பற்ற வேண்டும் என்று விரும்பியது கிடையாது. "நீ நீயாக இரு' என்பதுதான் ஓஷோவின் கருத்து.

"நீ பிறரை மாதிரி இருக்க நினைக்காதே. உன்னை மாதிரி நீ இரு'' என்பதே அவர் கருத்து.


நன்றி: தினமணி கதிர்!
தினமணி கதிரில் (11/25/2007) வந்த கட்டுரை [பயிற்சி: கோபத்தை விலகி நின்று கவனி! -- ந.ஜீவா]

2 மறுமொழிகள்:

  1. said...

    ம்ம்..நிறைய விஷயம் இருக்கு வாழ்கையில..எது எப்படி செய்யானும் தான் தெரியல...!!

    பகிர்வுக்கு நன்றி அண்ணாச்சி ;)

  2. said...

    Dhiyanam enbathu ippodulla valkai murail athiyavasiya thevai.