Pages

அழகே, உன்னை ஆராதிக்கிறேன்!

அழகுனு சொன்னவுடன் என் நினைவுக்கு வர்றது...
'கண்ணுக்கு மை அழகு
கவிதைக்கு பொய் அழகு
....'
வைரமுத்துவின் பாடல் வரிகள் தான்.

நினைவுக்கு வரும் முதல் ஆள்னா... என் அம்மா முகம். முகத்திற்கு வையில்லாத 'சாயம்' பூசினதில்லை.... அதிகமான அலங்காரம் பண்ணுதல்ல... வெளிய எங்க கிளம்புனாலும் எங்களுக்கு மேல முத ஆளா கிளம்பி இருப்பாங்க. அந்த எளிமையான அழகு! நமக்கு எது வேணும்னாலும் அப்பாகிட்ட தூது போற முத ஆள் அம்மாதான்... அப்பாகிட்ட இருந்த பயம் அம்மாகிட்ட இருந்ததில்ல... எங்க அம்மா சின்ன வயசுல எடுத்த புகைபடங்களை மட்டும் இல்ல இப்ப எடுத்த படங்களைகூட பார்த்துட்டே இருக்கணும் தோணும்.

இதுக்கும் மேல, யாரையும் எளிதா மன்னிக்க கூடிய அந்த மனசு ரொம்ப பிடிக்கும்.

இடம்னா, அது நான் திருச்சியில் படிச்ச கல்லூரிதான். 'ஆறு' வருடங்களுக்கும் மேலான ஒரு பந்தம். வாழ்க்கையில நான் கத்துக்கிட்ட எல்லா நல்லா விசயங்களுக்கும் ஆரம்பம் அதுதான் . அந்த வளாகத்திற்குள் இருந்தாலே மனசுல்ல அப்படி ஒரு அமைதி. சும்மா ஒரு நடை போனா, நேரம் போறதே தெரியாது. என் அப்பாவுக்கு நான் அங்க படிக்கணும் ஒரு ஆசை ... அதுக்கும் மேல 'லட்சியம்'னு கூட சொல்லலாம்... .. என் வாழ்வில் எனக்கு கிடைத்த நண்பர்கள், சந்தித்த மனிதர்கள், அனுபவங்கள்...... எல்லாமே வாழ்க்கை பாடம்தான். அந்தக் கல்லூரி இப்பொழுது நினைத்தாலும் அழகு.

(அட, எந்த கல்லூரி-ப்பா ...? ) அதாங்க... நம்ம ஜனாதிபதி அப்துல் கலாம் படிச்ச கல்லூரி.

கல்லூரி விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் கன்னியாகுமரி, நாகர்கோவில், கோட்டயம் சென்ற அந்த அழகான நிகழ்வுகள் . அப்பொழுது சென்ற இரயில் பயணங்கள் .... குறிப்பாக புகைவண்டியுடன் போட்டி போட்டு ஓடும் மரங்களை பார்த்துக்கொண்டே நண்பனுடன் படிக்கட்டில் உட்காந்து சினிமா, விளையாட்டு, வாழ்க்கை என பேசிய அந்த தருணங்கள் .... அவர்கள் குடும்பத்தில் ஒருவனாக இருந்து கொண்டாடிய பொங்கல், தீபாவளி, கிறிஸ்மஸ் விழாக்கள் ...என அந்த நிகழ்வுகளை நினைத்தால் இப்பொழுதும் அழகே!

வேலை, காதல்-கல்யாணம், எதிர்பார்த்த பிறப்புகள்/சந்தோஷங்கள், எதிர்பார்க்காத இழப்புகள்/வலிகள் என காலச் சுனாமியால் இப்பொழுது எனது மனதில் மட்டுமே இருக்கும் அந்த நினைவுகள்/காயங்கள் நட்பின் அர்த்ததை சொல்கின்றன-- எனக்கு மட்டுமா இல்லை என் நண்பர்களுக்குமா... ?

கல்யாண நாள் அன்று என் மனைவி கொடுத்த பரிசு...(டைட்டன்) கைக்கடிகாரம். என்னுடைய சம்பளத்தில நான் முதலில் வாங்கியது ஒரு கடிகாரம்தான் . அதுக்கப்புறம் பரிசாக எத்தனை கைக்கடிகாரம் கிடைத்தாலும், நான் முத முதலா வாங்கின அந்த கடிகாரத்ததான் கட்டிருந்தேன் - என்னவளிடம் இருந்து கிடைக்கும்வரை. அதுல என்ன... விசேஷம்னா என் மனைவியும் அவளுடைய முதல் சம்பாத்தியத்தில் வாங்கியதாம்.

என் மகள் செய்கின்ற ஒவ்வொன்றும் அழகான குறும்புகள்தான். அவள் 'அம்மாவாகி', அவள் அம்மா 'kid' ஆகி அவள் 'kid'யை மிரட்டுவதாகட்டும், அவள் 'teacher'ஆகி, நாங்கள் 'students' என்று நடக்கும் 'விளையாட்டுகள்' ஆகட்டும்... எல்லாமே அழகான குறும்புகள்தான்.

ம்ம்ம்ம்... கடைசியாக, எனக்கு கிடைக்காமலே போன அழகுனா .... அன்னை தெரசாவை நேரில் சென்று 'தரிசனம்' செய்யனும்-னு எண்ணிய அந்த அழகான தருணங்கள். என்னுடைய நீண்ட நாள் கனவும்கூட .. அது கனவாவே ஆயிடுச்சி... புகைபடங்களில், இப்ப பார்த்தாலும் கருணை வழியும் அந்த முகம். வாழ்க்கையின் பல அர்த்தங்களை சொல்லும்.

எல்லாவற்றிக்கும் மேலாக, மனிதனை 'மனிதனாக' மதிப்பவர்கள் எல்லாருமே அழகானவர்கள்தானே?!

நான் அழைக்கும் அழகானவர்கள்:

1. ஜோ / Joe
2. மணிகண்டன்
3. செல்வநாயகி

பி.கு: இந்த அழகு விளையாட்டை ஆரம்பித்து வைத்த "இலவசக்கொத்தனார்கும்",
என்னையும் இந்த விளையாட்டுக்கு அழைத்த "தமிழ்நதிக்கும்",
காட்டாறுக்கும் நன்றி!!

16 மறுமொழிகள்:

  1. said...

    முதலில் நான் போட்ட பின்னூட்டத்தை இணையத்தொடர்பு குழப்பி விழுங்கிவிட்டது. மூணாப்பு பையன் மாதிரி அனுமதியெல்லாம் கேட்டுவிட்டு 'அழகான'ஒரு பதிவைப் போட்டிருக்கிறீர்கள்.:) உங்கள் பதிவின் வழியாக அழகான,அன்பான ஒரு குடும்பத்தையும் பார்க்கக் கிடைத்தது. நீங்கள் அழைத்திருப்பவர்களில் செல்வநாயகியின் எழுத்துக்கள் எனக்கும் பிடிக்கும்.(அதற்காக மற்றவர்களைப் பிடிக்காதென்றில்லை) 'அழகான'அவருடைய பதிவையும் எதிர்பார்த்திருக்கிறேன்.பழைய ஞாபகங்களை மீட்டிப் பார்ப்பதே ஒரு அழகான சாலையில் நடந்துபோவதுபோலதான் இல்லையா...?

  2. said...

    Thenral..pear a parthidu neenga oru pen endu ninathu viden (ean endu sariya theriyella).

    Kalluri ellarukume alakana idam than.
    appuram kulanthaikal...solave thevai ilai:-))

  3. said...

    தென்றல்,
    நீங்களும் நம்ம கல்லூரி தானா ? நானும் 6 வருடங்கள் அங்கு தான் ,அப்துல் கலாம் படித்த துறையில் தான் படித்தேன்.

    அழைப்புக்கு நன்றி!

  4. said...

    ஆழியூரானிடம் மாட்டிய கிறுக்கையே இன்னும் எழுதாமல் போக்குக் காட்டிக்கொண்டிருக்கிறேன் நான். இப்ப நீங்களும் அழகுல வேற மாட்டவெச்சிட்டீங்களா:))

    அன்பான அழைப்புக்களை மறுக்கவும் முடியாமல், இதையெல்லாம் சட்டென நினைத்த நேரத்துக்கு எழுதும் ஆர்வமும் வராமல் ஒரு வித்தியாசமான அவஸ்தையில் இருக்கிறேன்:))

    உங்களின் அழகு பற்றிய பார்வை நன்றாக இருக்கிறது. அன்பில் வெளிப்படாத அழகு வேறு எதில் இருக்க முடியும்? தொடர்ந்து எழுதுங்கள். நன்றி.

  5. said...

    /தமிழ்நதி ...மூணாப்பு பையன் மாதிரி அனுமதியெல்லாம் கேட்டுவிட்டு 'அழகான'ஒரு பதிவைப் போட்டிருக்கிறீர்கள்.:) /

    :)

    /பழைய ஞாபகங்களை மீட்டிப் பார்ப்பதே ஒரு அழகான சாலையில் நடந்துபோவதுபோலதான் இல்லையா...?/

    பின்னூட்டத்தில் அழகு சேர்த்ததிற்கு நன்றி, தமிழ்நதி!

    /சினேகிதி ...
    Thenral..pear a parthidu neenga oru pen endu ninathu viden (ean endu sariya theriyella).
    /
    என் நண்பரின் மகள் பெயர், தென்றல்.
    இப்படிலாம் கேள்விவரும் அப்ப தோணலை. ;)
    [நம்ம பதிவெல்லாம் யாரு படிக்கப் போறாங்க-னு ஒரு "நம்பிக்கை"யா கூட இருக்கலாம் ;);)]

    வாங்க, ஜோ!

    /நீங்களும் நம்ம கல்லூரி தானா ?/

    வாவ்... மகிழ்ச்சி-ங்க! நான் உங்களுக்கு மெயில் அனுப்புறேன். நம்ம கதைய 'அங்க' வச்சிக்கலாம்.

    /அழைப்புக்கு நன்றி! /
    ஏற்றமைக்கு நன்றி!

    /செல்வநாயகி.... அன்பான அழைப்புக்களை மறுக்கவும் முடியாமல், இதையெல்லாம் சட்டென நினைத்த நேரத்துக்கு எழுதும் ஆர்வமும் வராமல் ஒரு வித்தியாசமான அவஸ்தையில் இருக்கிறேன்:)) /

    செல்வநாயகி, உங்களுக்கு நேரம் கிடைக்கும்பொழுது அழகைச் சொல்லுங்கள், (வழக்கமான) அழகுடன்...

    தமிழ்நதி சொன்னதையே இங்கு குறிப்பிடுகிறேன்..
    "நீங்கள் அழைத்திருப்பவர்களில் செல்வநாயகியின் எழுத்துக்கள் எனக்கும் பிடிக்கும்.(அதற்காக மற்றவர்களைப் பிடிக்காதென்றில்லை) 'அழகான' அவருடைய பதிவையும் எதிர்பார்த்திருக்கிறேன்.பழைய ஞாபகங்களை மீட்டிப் பார்ப்பதே ஒரு அழகான சாலையில் நடந்துபோவதுபோலதான் இல்லையா...?"

    நன்றி, செல்வநாயகி!

  6. said...

    //பழைய ஞாபகங்களை மீட்டிப் பார்ப்பதே ஒரு அழகான சாலையில் நடந்துபோவதுபோலதான் இல்லையா...?"//

    அதுக்குத்தானே இந்த தொடரை ஆரம்பித்து வைத்தது. :)) அழகான பதிவு தென்றல். மற்றவை நேரில் - ஏப்ரல் 28 அன்று!!

  7. said...

    /அழகான பதிவு தென்றல்./
    நன்றி,
    இலவசக்கொத்தனார் ...ம்ம்ம்
    ....இலவசம், கொத்தனார்... கொத்ஸ்.... உங்களை எப்படி கூப்பிடிறது..?
    சரிங்க.. 28ம் தேதி முடிவு பண்ணிக்கலாம்!

  8. said...

    வணக்கம் தென்றல்

    உங்க அழகு எல்லாம் உங்களின் பதிவின் பெயர் போலவே தென்றல் வீசுது.

    \\அப்பொழுது சென்ற இரயில் பயணங்கள் .... குறிப்பாக புகைவண்டியுடன் போட்டி போட்டு ஓடும் மரங்களை பார்த்துக்கொண்டே நண்பனுடன் படிக்கட்டில் உட்காந்து சினிமா, விளையாட்டு, வாழ்க்கை என பேசிய அந்த தருணங்கள் ..\\

    பயணம் என்றாலே அழகுதான் இதில் நண்பர்களுடன் என்றால் இன்னும் அழகுதான். பல நேரங்களில் பேச மறந்த விஷயங்களை மனம்திறந்து பேசிய கணங்களை மறக்கவே முடியாது. அப்படியே பழைய ஞாபகத்திற்கு கொண்டு போகுது உங்க அழகு ;-)

    \\என் மகள் செய்கின்ற ஒவ்வொன்றும் அழகான குறும்புகள்தான். அவள் 'அம்மாவாகி', அவள் அம்மா 'kid' ஆகி அவள் 'kid'யை மிரட்டுவதாகட்டும், அவள் 'teacher'ஆகி, நாங்கள் 'students' என்று நடக்கும் 'விளையாட்டுகள்' ஆகட்டும்... எல்லாமே அழகான குறும்புகள்தான். \\

    ம்ம்ம்.....உங்க குட்டி தென்றலுக்கு என் வாழ்த்துக்கள் ;-)

  9. said...

    நன்றி, கோபிநாத்!

    /ம்ம்ம்.....உங்க குட்டி தென்றலுக்கு என் வாழ்த்துக்கள் ;-) /

    மிக்க நன்றி!

    மீண்டும் சந்திப்போம்! :)

  10. said...

    இன்றைக்கு தான் பார்த்தேன்..அழகான பதிவு...

  11. said...

    /மங்கை said....
    இன்றைக்கு தான் பார்த்தேன்..அழகான பதிவு...
    /

    நன்றி-ங்க!

  12. said...

    தென்றல்,

    என்னையும் இந்த ஆட்டத்துக்கு கூப்பிட்டதுக்கு நன்றி. சீக்கிரமே எழுதிடறேன். ஆணி கொஞ்சம் அதிகமா இருக்கறதால திட்டமிட்டபடி பதிவு போட முடியலை.

  13. said...

    வேலையெல்லாம் முடிச்சிட்டே வாங்க, மணிகண்டன்!

    நன்றி!!

  14. said...

    வாங்க, டாக்டர்.Delphine!

    அந்த தெப்பக்குளத்த வழியா .. கல்லூரி போகுறதே ஒரு இனிமையான 'கலர்புல்லான' அனுபவம்தான்.... ம்ம்ம்ம்!

  15. said...

    எனக்கும் பழக்கமான ஊரைத்தான்[திருச்சி] குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

    தெப்பக்குளத்துக்கு இந்தப்பக்கம் அகஸ்தியர் புக் டிப்போ வுக்கு பக்கத்தில் இருந்த உயர்நிலைப் பள்ளியில்தான் நானும் படித்தேன்!

    அழகுகள் ஆறும் அருமையாக ஓடி இதமான தென்றலை வீசியது!

  16. said...

    வணக்கம், அய்யா! வாங்க..!!

    /தெப்பக்குளத்துக்கு இந்தப்பக்கம் அகஸ்தியர் புக் டிப்போ வுக்கு பக்கத்தில் இருந்த உயர்நிலைப் பள்ளியில்தான் நானும் படித்தேன்!/
    ஓ..அப்படியா!
    அய்யா... மாரீஸ் திரையரங்களாம் அப்ப இருந்ததா?

    /அழகுகள் ஆறும் அருமையாக ஓடி இதமான தென்றலை வீசியது! /
    எனக்கு (மட்டும்) ஒரு உண்மைய சொல்லுங்க.. நீங்க எப்பவுமே கவிதை(யா)தான் பேசுவீங்களா?.....இல்ல... நீங்க பேசினாலே அது கவிதையா?