Pages

திருமணமான என் தோழிக்கு -- பாலகுமாரன்

கல்லூரி நாட்களில் நான் படித்த முதல் நாவல் "இரும்புக் குதிரைகள்". இன்றும் குதிரையைப் பார்த்தால் அந்த கம்பீரம் பிடிக்கும். பாலகுமாரன், கதை சொல்வதில் வல்லவர்.

'.....................என்னுடன் உரையாடவும் என்னைப்பற்றி பொருட்படுத்தும்படி எதையாவது எழுதவும்கூட ஒருவருக்கு அதற்கான தகுதி வேண்டும்.' என்று சொல்லும் எழுத்தாளர்களுக்கு மத்தியில்........ வாசகர்களுக்கு, தான் எதிர்கொண்ட பிரச்சனைகளையும், தன்னுடைய அனுபவங்களையும்...... வாழ்க்கையில் நாம் தினமும் சந்திக்கின்ற பிரச்சனைகளை அவர் அலசி ஆராய்ந்து எளிமையாய் சொல்வதில் தேர்ந்தவர்.

நம் சமுதாயத்தில் திருமணம் என்பது சம்பிரதாய சடங்காக இருந்தாலும், மனதில் ஏற்படும் மகிழ்ச்சியும், சந்தோக்ஷமும்.... வீட்டில் களைகட்டத் தொடங்கும். அதை அனுபவித்தவர்களுக்கு தெரியும். ஆனால் பெண்களுக்கு அது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை. சிலர் 'அடிபட்டு' திருந்தகூடும். சிலர் மற்றவர்களின் அனுபவங்கள் மூலமாக...

'திருமணமான என் தோழிக்கு..' நாவல் அல்ல! கட்டுரை. நான்கு விதமான குடும்பங்கள். அந்த குடும்பங்களில் ஏற்படும் சிக்கல்கள். அதைக் குறித்து பொதுவாக வைத்துக் கொள்ள வேண்டிய கவனம், தெளிவு பற்றி அவருக்கே உரிய பாணியில் சொல்கிறார்.

படிக்கும் பொழுது ... கதைகளில் செயற்கைதனம் இருந்தாலும், சொல்ல வந்ததை நேர்த்தியாக சொல்லி இருக்கிறார் ..... எப்பொழுதும் போல்!!

தோழிகள் மட்டுமல்ல தோழர்களும் படிக்கலாம்!

கட்டுரையிலிருந்து சில வரிகள் .....

"வெற்றி போதும் என்று தோன்றியவர்கள், வெற்றி பெற்றவர்கள் என்று விலகியவர்கள் சமுதாயத்தின் மிகப் பெரிய விஷவிருட்சங்கள். அவர்கள் தானும் வளர்வதில்லை. மற்றவர்களையும் வளரவிடாதவர்கள். அதிகமிருப்பாதால்தான் மிகப் பெரிய பிரச்சனையாக வாழ்க்கை இருக்கிறது. மற்றவர்களுடைய வெற்றியைப்பற்றி குமுறுகிறவர்கள்தான் இந்த தேசத்தில் அதிகமாக இருக்கிறார்கள். அவர்கள் சோம்பேறிகளாகவும் இருக்கிறார்கள். அந்த சோம்பேறிகள் தானும் ஜெயிக்காது, மற்றவர்களையும் ஜெயிக்கவிடாது ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். இவைகளை அப்புறப்படுத்தினால் இந்த தேசம் நன்றாக இருக்கும்."

"வீட்டுச் சண்டைகளை மறக்க சினிமாவுக்கோ, நாடகத்திற்கோ செல்பவன் முட்டாள். அவன் வீட்டுக் கூச்சலை மறக்க இன்னொரு கூச்சலுக்குப் போகிறானே தவிர தனிமையில் தன்னுடைய பிரச்சனை என்ன என்பதை புரிந்து கொள்ள முடியாதவனாகவே போய் விடுகிறான். தன் பிரச்சினை என்ன என்று சொல்லமுடியாதவன் பிறர் மீது ஆளுமை செலுத்துவது என்பது என்ன. அடித்து உதைத்தலா, அகங்காரத்துடனும், ஆத்திரத்துடனும் பேசுவதா, இல்லை. அவர் சொன்னால் மற்றவர்கள் கேட்க வேண்டும், இவன் சொன்னால் அதில் அர்த்தமிருக்கும் என்று மற்றவர் காது கொடுக்க வேண்டும். அதற்கு பெயர்தான் ஆளுமை. அந்த ஆளுமை உன்னிடம் இருக்கிறதா. நீ சொன்னால் காது கொடுத்துக் கேட்கிறார்களா ஏன் கேட்க வில்லை. உனக்கே உன்னைப் பற்றி புரியவில்லை."

"பயணம் மேற்கொள்ளுகிறபோது வாழ்க்கையின் நிலையாமை ஒரு மனிதனுக்கு புரிகிறது. பயணம் மேற்கொள்ளுகிறபோது உலகத்தினுடைய பிரமாண்டம் புரிகிறது. பயணம் மேற்கொள்கிறபொழுது எத்தனை விதமான மக்கள், எத்தனை விதமான வாழ்க்கை, எத்தனை விதமான முயற்சிகள், எத்தனை விதமான தோல்விகள், எத்தனை விதமான வெற்றிகள் என்பது தெரிந்து போகின்றன. நல்லதும், கெட்டதும் முகத்திற்கு நேரே வந்து பயணத்தின்போது ஓடுகின்றன. நம்முடைய பிரச்சனை ஒன்றுமே இல்லை. நம்மைவிட வேதனைப்படுகிறவர்கள் அதிகம் என்பதும் புரிந்து போகிறது. பூமியின் பரப்பு புரியப் புரியதான் தூசினும் தூசாக இருப்பது தெரிந்து விடுகிறது. ஒரு தூசு இன்னொரு தூசோடு சண்டைப்போடுவதற்கு என்ன இருக்கிறது. என்ன காரணம் இருக்கிறது என்ற தெளிவு வருகிறது."

"இந்திய விவசாயம் இயற்கையோடு நடக்கின்ற சூதாட்டம். இந்தியப் பெண்களின் வாழ்க்கை ஆண்களோடு நடக்கும் போராட்டம். எத்தனை புராணங்கள் விவரித்து விளக்கியபோதும் சக்தி, தாய் எல்லாம் வல்லவள் என்று உரத்த குரலில் பலபேர் பல காலமாக முழங்கியபோதும் இந்த கணம் வரை இந்தியப் பெண் அடிமையாகத்தான் இருக்கிறாள். ஆணின் அட்டகாசத்திற்கு அடங்கியவளாகத்தான் இருக்கிறாள். "

"................ திருமணமாகிய பெண்ணை தன் அம்மாவுக்கு வேலை செய்ய அனுப்புவது என்பது பல ஆண்களின் குறிக்கோளக இருக்கிறது. எனக்கு மட்டும் அனுசரித்தால் போதாது. என் அம்மாவிற்கும், அம்மாவின் அம்மாவுக்கும், அம்மாவின் உறவினர்களுக்கும், அப்பாவின் உறவினர்களுக்கும், எதிர்வீட்டு நண்பர்களுக்கும் இன்னபிற வகையறாக்களுக்கும் அனுசரிச்சதுப் போகவேண்டும் என்று ஒரு முன்னூறு ஆட்களை எடுத்தவுடனே அவள் முன்னே காண்பித்து, அவளை திணறடிப்பது திருமணத்தின் முக்கிய நோக்கமாக இருக்கிறது.

அனுசரித்து அனுசரித்துப்போய் அவளுக்கென்று சொந்த விருப்பு வெறுப்புகள் எதுவும் இல்லாமல் வெறும் மரக்கட்டையாகவே பெண் முப்பது நாற்பது வயதில் மாறி விடுகிறாள்.

அவளுடைய கலைத்திறனோ, அறிவுத்திறனோ கூர்மைபெறாமல் மழுங்கிப் போய்விடுகிறது. எனவே முடிவெடுக்கத் தெரியாத பேதையாகவே முதிர்ந்த வயதுவரை அவள் வாழ்கிறாள். எல்லா விஷயத்திற்கும் பிறரை நம்பி இருக்கிறாள். ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடம் போவதிற்குகூட அவளுக்கு ஆண்களின் துணை தேவைப்படுகிறது. அப்படிப் போகிறவளே நல்ல பெண் என்கிற நிலைமையும் இங்கு இருக்கிறது. அவள் சற்று திமிராகவும், தன்னுடைய அபிப்ராயம் இது என்று சொல்பவளாகவும் இருந்தால் அவள் வாயாடியாக, அகங்காரியாக மற்றவர்களுக்கு காட்சி தருகிறாள்."

"பிரச்சனை எதுவாயினும் பிரச்சனையை தீர்த்து ஜெயித்து விட்டால், ஆண்கள் பதக்கம் குத்துகிறார்கள். தோல்வி என்றால் பெண்களை சுட்டிகாட்டுகிறார்கள். இந்த அவலம் காலகாலமாக நடந்து வருகின்ற ஒரு சோகம்."இந்த தலைமுறையில் பெண்களுக்கான சில சோகங்கள் மறைந்திருக்கின்றன. முற்றிலுமாக மறைய எத்தனை தலைமுறைகள் ஆகுமோ?

1 மறுமொழிகள்:

 1. said...

  \\"பயணம் மேற்கொள்ளுகிறபோது வாழ்க்கையின் நிலையாமை ஒரு மனிதனுக்கு புரிகிறது. பயணம் மேற்கொள்ளுகிறபோது உலகத்தினுடைய பிரமாண்டம் புரிகிறது. பயணம் மேற்கொள்கிறபொழுது எத்தனை விதமான மக்கள், எத்தனை விதமான வாழ்க்கை, எத்தனை விதமான முயற்சிகள், எத்தனை விதமான தோல்விகள், எத்தனை விதமான வெற்றிகள் என்பது தெரிந்து போகின்றன. நல்லதும், கெட்டதும் முகத்திற்கு நேரே வந்து பயணத்தின்போது ஓடுகின்றன. நம்முடைய பிரச்சனை ஒன்றுமே இல்லை. நம்மைவிட வேதனைப்படுகிறவர்கள் அதிகம் என்பதும் புரிந்து போகிறது. பூமியின் பரப்பு புரியப் புரியதான் தூசினும் தூசாக இருப்பது தெரிந்து விடுகிறது. ஒரு தூசு இன்னொரு தூசோடு சண்டைப்போடுவதற்கு என்ன இருக்கிறது. என்ன காரணம் இருக்கிறது என்ற தெளிவு வருகிறது."
  \\

  அட்டகாசமான பகுதி ;))

  எவ்வளவு எளிமையாக சொல்லிட்டாரு...

  நல்ல பதிவு தல ;)