Pages

மணிச்சித்திரதாழ் - அப்தமித்ரா - சந்திரமுகி - பூல் புலயா

மணிச்சித்திரதாழ் 14 வருடத்திற்கு முன் வந்த படம். கேரளாவில் 600 நாட்கள் ஓடியது...

பாசில், மோகன்லால், ஷோபனா, நெடுமுடி வேணு, திலகன், இன்னோசண்ட், KPAC லலிதா [மறைந்த இயக்குநர் பரதனின் மனைவி (தேவர் மகன், ஆவாரம் பூ) ] .....இப்படி திறமையான நடிகர்கள்....நடிகைகள்...

வித்தியாசமான கதை...அதற்கு சொந்தக்காரர் மது முட்டம் .... திரையில் தெளிவாக கொண்டு சென்றது பாசிலின் இயக்கம்.....

ஷோபனாவின் நடனம், நடிப்பு.... (தேசிய விருது வாங்கி கொடுத்தது)

மோகன்லாலின் காமெடி...

நெடுமுடி வேணு, திலகன், KPAC லலிதா, இன்னோசண்ட் ... இவ்ர்களின் நடிப்பைப்பற்றி எதுவும் சொல்லதேவையில்லை... அருமையான கலைஞர்கள்!
இதை பி.வாசு அப்தமித்ரா, சந்திரமுகி என்று கன்னடத்திலும், தமிழ்/தெலுங்கிலும் எடுத்து வெற்றி படங்களாக்கியவர்...

அப்தமித்ரா .. படம் பார்க்கவில்லை...அதனால் சொல்றதுக்கு ஒன்றுமில்லை...

சந்திரமுகி ... சூப்பர் ஸ்டார் படம் .... சும்மா வந்தாலே படம் 100 நாட்கள் ஓடும்..(ஜப்பானிலும்..). அவருக்கு இப்படி ஒரு அழுத்தமான கதை தேவையில்லைதான்...ஆனால், சந்திரமுகியின் இறுதிக்காட்சி பார்த்துட்டு 'என்ன கொடுமையிது சரவணா?' என்றுதான் தோன்றியது...

மணிச்சித்திரதாழின் கதையே அந்த இறுதிக்காட்சிகள்தான்.

அதையே தமிழில் எடுக்கும்போது அப்படியே எடுக்கவேண்டியதுதானே...அந்த கதையை 'சிதைத்த' பெருமை பி.வாசுவுக்கும், சூப்பர் ஸ்டார் (??) க்குமே! ம்ம்ம்..அது சரி...சின்னதம்பி எடுத்த உங்ககிட்ட அதுக்குமேல 'எதிர்பார்க்கிறதும்' தப்புதான்!!

இப்பொழுது அந்த படத்தை இந்தியில் பிரியதர்ஷன் பூல் புலயா (Bhool Bhulaiyaa) ஆக வெளிவந்துள்ளது...

பிரியதர்ஷன்.. மணிச்சித்திரதாழின் உதவி இயக்குநரில் ஒருவர்.... தமிழில் 'சிறைச்சாலை' தவிர இவர் நல்லதொரு படம் எடுக்கவில்லை... ஆனால், மலையாளத்தில் பல வெள்ளி விழா படங்கள் கொடுத்தவர்.... உதாரணத்திற்கு.... போயிங் போயிங், தாளவட்டம், சித்திரம், வந்தனம்,கிலுக்கம்..
அதுவும் (கல்லூரியிலிருந்தே நண்பரான) மோகன்லாலுடன் கூட்டணி என்றால்.....'அல்வா' சாப்பிடுவதுபோல...

ஷோபனா....செளந்தர்யா..ஜோதிகா வரிசையில் வித்யா பாலன்

மோகன்லால்...விஷ்ணுவர்த்தன்..ரஜினிகாந்த்..அக்சய குமார்

சுரேஷ் கோபி..ரமேஷ் அரவிந்த்...பிரபு.. சினய் அகுஜா

வினயா...பிரேமா...நயந்தாரா..அமிஷா படேல்


'பூல் புலயா'வில் இறுதிக்காட்சி எப்படியோ?

உன்னால் முடியும் தம்பி

பள்ளி செல்லும் நாட்களில் தேர்வு முடிந்த அன்று அம்மாவிடம் கேட்கும் முதல் கேள்வி, 'முத்து காமிக்ஸ் எங்க (மறைச்சி) வைச்சிருக்கீங்க?' ஒவ்வொரு மாதமும் வாங்கி வந்த முத்து காமிக்ஸை அப்பா அம்மாவிடம் குடுத்து 'பரீச்சை முடிந்தவுடன் காண்பி' என்று சொல்லிவிட ... அதுவே பழக்கமானது.

முழுஆண்டு தேர்வின் விடுமுறையின் போது, ஒருநாள் எம்.எஸ்.உதயமூர்த்தியின் 'எண்ணங்கள்' புத்தகம் தர.. 'அட' என்று ஆச்சரியத்துடனும் ஆர்வத்துடனும் படித்ததுண்டு. அதற்குப்பின் ஙலகத்தில் அவருடைய புத்தகங்களை தேடி தேடி படித்தது .... இன்னும் நினைவில் இருக்கிறது.

திருச்சியில் பள்ளி நாட்களில் பாலச்சந்தரின், "உன்னால் முடியும் தம்பி" (காவேரி திரையரங்கம் என்று நினைவு) வெளியானபோது நண்பர்களுடன் காலையில் சென்று வரிசையில் நின்று டிக்கெட் வாங்கியது மறக்க முடியாத நாட்கள்! இதுதான் கமல், பாலச்சந்தர், இளையராஜா கூட்டணியில் வந்த கடைசி(!) படம். பிடித்த படங்கள்னு ஒரு பட்டியல் போட்டால் கண்டிப்பாக "உன்னால் முடியும் தம்பி" யும் உண்டு. பாடல்கள் இங்கே

இப்பொழுது தினமலரில் எம்.எஸ்.உதயமூர்த்தியின் 'உன்னால் முடியும்' என்ற தொடர் வருகிறது... அதிலிருந்து சில...


"வேலைக்காக வாழ்கிறோமா அல்லது வாழ்வதற்காக வேலை செய்கிறோமா?' என்றொரு கேள்வி. வாழ்க்கை ஒரே ஓட்டம், ஒரே நெருக்கடி, போட்டி நிறைந்த உலகம்! "எனக்கு நேரமில்லை...' என்ற புலம்பல். "ஏன் ஓடுகிறேன் இப்படி?'

பிறர் என்னைப் பார்க்கும் போது, என் காரையும், வீட்டையும், என் தோல்பையையும், என் பேங்க் பேலன்சையும் பார்த்து அவர்கள் பிரமிக்க வேண்டும். இப்படி ஒரு ஆசை. இது என் ஜீவதாகம்; என் ஆசையும் இதுதான். என் ஆசையின் பின்னால் நான் ஓடுகிறேன்!

இந்த ஊரும், உலகமும் என்னை ஆசைகளால் முடுக்கி விட்டி ருக்கிறது; ஓடுகிறேன்!

என் பையைப் பார்க்கிறேன். என் பேனா. எழுத ஒரு சாதாரண பேனா போதாதா? என் பையில் இருப்பது ஐரோப்பாவில் தயாரிக்கப்பட்ட மாண்ட் பிளாங்க்! வாழ்வில் இவையெல்லாம் தேவையா?

"இவை எல்லாம் அத்தியாவசியமா?'

கேள்வி மேல் கேள்விகள். "யாருமில்லை சாட்சியாக. மனமே கேள்வியாக!' என்ற கவிதை வரிகள் நினைவுக்கு வருகிறது. இதுதானா வாழ்க்கை?

சில நாட்களுக்கு முன் நான் சென்ற காந்திஜியின் அருங்காட்சியகம் என் கண்முன் சினிமா போல திடீரென ஓடியது.

அங்கே காந்திஜி படத்தின் முன் அவர் உபயோகித்த ஒரு ஜோடி செருப்பு, ஒரு மூக்கு கண்ணாடி, அவர் உபயோகித்த கடிகாரம். இவைதான் அவரது தேவை.

என் தேவை, அதை விட அதிகம் தான். என் எல்லைகளைப் பற்றி எனக்கு ஒரு திட்டம் உண்டா அல்லது அவ்வப்போது மனதில் பட்டதை வைத்து வாழ்வை ஓட்டிக் கொண்டிருக்கிறேனா? வருமானம் வாழ்வின் முக்கிய தேவைதான். ஆனால், அதுவே எல்லாம் அல்ல...

நம் வாழ்வில் நாம் பெருமைப்படும்படி செய்யும் சிறு, சிறு சாதனைகளில், உலகைப் புரிந்து கொள்வதில் ஊருக்கு உதவுவதில், மனித உறவில், அந்த மகிழ்ச்சியில் வாழ்க்கை நெறிகளில் தான் நமது நிரந்தர மகிழ்ச்சி இருக்கிறது. வருமானம் குறைவாக இருக்கும் போதும், அது போதுமானதாக இருக்கும் போதும், நாம் மகிழ்ச்சி கொள்ள வேண்டும்.

சம்பளம் இல்லாமல், நம் குடும்பத்தின் மனைவி என்ற ஒரு பெண் நம்மை நம்பி தன் வாழ்க்கையை நமக்காக அர்ப்பணித்திருக்கிறாள். தெய்வீக அன்புடன், நம் குழந்தைகள் என்ற அவர்களின் எதிர்காலம் பற்றிய கற்பனை, அதற்கான முயற்சி வாழ்வில் தான் எத்தனை, எத்தனை சந்தோஷங்கள், ஆனந்தங்கள் இருக்கின்றன!

சொல்கிறார் வள்ளுவர்:

"ஈதல், இசை பட வாழ்தல் மற்றும் ஊதியமில்லை உயிர்க்கு!' நமது குழந்தைகளுடனும், மனைவியுடனும் பெற்றோருடனும் இசைபட வாழ்தல், இணைந்து அனுசரித்து பெருமையுடன் வாழ்வது இருக்கிறதே... அதுவும் ஊருக்கு உதவியாக இருப்பதும்தான் பெரிய பாக்கியம் என்கிறார் வள்ளுவர்.

இல்லாதவர்களுக்கு கொடுப்பதில், உதவுவதில் தான் வாழ்வின் அர்த்தம் புரிகிறது. உலகுடனும், இந்த பிரபஞ்சத்துடனும் இசைபட வாழ்வது இருக்கிறதே... அது, எவ்வளவு பெரிய பாக்கியம், எவ்வளவு பெரிய ஆனந்தம்.

வாழ்வில் கற்பனை என்ற மாபெரும் சக்தி, துணை ஒன்று இருக்கிறது. புலன் ஆகாத ஒரு உலகிற்கு இது நம்மை அழைத்து செல்கிறது. பல தொழிலதிபர்கள் இசை, நாட்டிய கலைஞர்கள், கதாசிரியர்கள், யோகிகள் இவர்களது கற்பனைதான் ஒரு புதிய உலகத்தை அவர்களுக்கு எடுத்துக் காட்டுகிறது. கற்பனையை வாழ்வில் சரியானபடி உபயோகிக்கும் போது, "ஏன் முடியாது?' என்றொரு எண்ணம் எழும், அதற்கு நாம் பதில் சொல்லும்போது சாதனை பிறக்கிறது; பல நல்ல காரியங்கள் நிகழ்கின்றன. மனிதனின் கனவுகளும், கற்பனைகளும் பல புதிய பொருட்கள் கண்டுபிடிக்க உதவி இருக்கின்றன.

வாழ்க்கை ஒரு இனிய அனுபவம்; உலக உண்மைகளை அறிந்து கொள்ளும் அறிவு. மனிதன் தேவனாகும் முயற்சி தான் வாழ்க்கை!

"மனதில் சலனமில்லாமல், மதியில் இருளே தோன்றாமல் நினைக்கும்பொழுது நின் மவுன நிலை வந்திட நீ செயல்பட வேண்டும்!' என்கிறார் கவிஞர் ஒருவர். மனதில் எந்தவித எண்ணமும் இல்லாமல் மனதை வெற்றிடமாக்கி, அமைதியாக இருந்து பாருங்கள் ஒரு அரை மணி நேரம். உங்கள் உள் உணர்வு, உங்கள் கேள்விகளுக்கு பிரச்னைகளுக்கு வழிகாட்டும், தெளிவும், விடிவும் கொண்டு வரும்.