Pages

நண்டு

ஒலிம்பிக் போட்டியை பார்க்கும்பொழுது 'பெரு மூச்சை ' தவிர்க்கமுடியவில்லை!  முதல் நாளின் போது, 120 கோடி மக்கள்தொகை, இன்னும் சில வருடங்களில் சீனாவை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடம் வகிக்க போகும் நம்மிடமிருந்து வெறும் 57 பேர்தான் அனுப்ப முடிகிறது. 50,000 மற்றும் 1 மில்லியன் மக்கள் தொகை கொண்ட நாடெல்லாம் 10 பேரும், 30 பேரும் அனுப்பும்பொழுது,  'நமக்கு என்ன வந்தது? எத்தனை நாளைக்குதான் இப்படினு...' ஒரு விரக்தியும் 'கொஞ்ச நேரத்துக்கு'  வருத்தமும் வந்துட்டு போகுது.

Beach Volleyball, நீச்சல், ஜிம்னாஸ்டிக்ஸ்,குத்துச்சண்டை....  போட்டிகளைலாம் பார்க்கும்பொழுது  இவுங்களைவிட நம்ம மக்கள் சூப்பரா பண்ணுவாங்களேனு ஆதங்கம்தான் வருது.

தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து முறையாக பயிற்சி அளித்தால் கண்டிப்பாக 2020 ஒலிம்பிக்கில் அதிக தங்கங்கள் வாங்கும் வாய்ப்புகள் அதிகம்.  ஆனால் எந்த தொலைநோக்குப் பார்வைகளும் இல்லாமல் ... ஒரு தங்கம் வாங்கின உடனே 'கோடிகளையும்',  'வாழ்நாள் முழுவதும் ரயில்வேயில் இலவச பாஸ்'  என அறிவிப்பும் எவ்வளவு அபத்தமாக இருக்கிறது.  இதுதான் நமது  தரமா?  அபினவ் பிந்த்ரா ஒரு CEO. அவருக்கு எதுக்கையா இலவச பாஸ்....  இதற்குப் பதிலாக அவருடைய பயிற்சிக்கு ஆகும் தொகையை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளலாம்... இல்லை பல 'அபினவ் பிந்த்ரா'க்களை உருவாக்குவதற்கு எண்ண செய்யலாம் என்று யோசனையாவது பண்ணலாம்!

பள்ளி, கல்லூரி, மாவட்ட, மாநில அளவில் சாதனை படைக்கும் விளையாட்டு வீரர்களில் பெரும்பாலானவர்கள் சாதாரண  குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில் ஆர்வமுள்ளவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சத்தான உணவு, நல்ல பயிற்சியாளர்கள்,  சேஷன் மாதிரி ஒரு தலைவரை விளையாட்டுத் துறைக்கு தலைவராக்கி அதற்கு அதிகம் தொகையை ஒதுக்கி ..... என ஒரு செயல்திட்டம் கொண்டு வந்தால் நம்மாலும் 2020 ஒலிம்பிக்கில் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் போட்டியாக வரமுடியும்.

அரசியலும், EGOவும் புகுந்து நமது ஹாக்கி அணி படும்பாடு நமக்கெல்லாம் தெரிந்ததுதான். IPL மாதிரி ஹாக்கி விளையாட்டுக்கும் நடத்த முடியாதான்னா.....கேட்டால் பணம், மக்கள் ஆர்வமின்மை ஒரு பெரிய பட்டியல் நம்மிடமுண்டு.

இந்தியர்கள் ஒவ்வொருவரும் தனிதனியே நல்ல திறமைசாலிகள். ஒரு அணியாக இருந்து செயல்படவேண்டும் என்றால் 'நண்டு கதை'தான்!!

நாளை ஆகஸ்ட் 15!  அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்!!

தங்க பதக்கம்

08-08-08 - இரவு 08:08 முதல் ஒலிம்பிக் போட்டி (ஆகஸ்டு 8 - 24) ஆரம்பமாகும் நேரம். சீனாவுக்கு 8 ராசியான எண் என்பதால் எல்லாம் "8" மயம்!

இந்தியாவுக்குகூட 'நம்பர் 8' ராசியானது! இதுவரைக்கும் நம்ம வாங்கின மொத்த தங்கம்: 8 (1900 - 2004).  நமக்கு பெருமை சேர்த்த அந்த ஒரு அணி: ஹாக்கி! 1928 லிருந்து 1956 வரை தொடர்ந்து 6 முறை தங்கம் வென்றது. கடைசி தங்க பதக்கம் வாங்கிய ஆண்டு 1980!  இந்த வருடம் தகுதி சுற்றிலேயே அதுவும் "காலி!"

2008க்கான ஒலிம்பிக் போட்டியை சீனா நடத்த கனடா, பிரான்ஸ், துருக்கி & ஜப்பான் நாடுகளுடன் போட்டி போட்டு  வென்றடுத்திருக்கிறது.

இந்தியாவிலிருந்து 99 பேர் கொண்ட அணி (சீனா - 639; அமெரிக்கா - 596 பேர்) 2008 பீஜிங் ஒலிம்பிக்கு போயிருக்கு. இந்த 99 பேருல 57 வீரர்கள் மற்றும் 44 அரசு அதிகாரிகள் (சானியா மிர்ஷா அம்மாவும் உண்டு!) 57 வீரர்களுக்கு 44 அரசு அதிகாரிகள்...!! எல்லாம் நம்ம வரிப்பணத்திலதான் இந்த பயணம்....!

முதன் முதல 1900 ஒலிம்பிக்கில் தடகளப்போட்டில 2 வெள்ளி பதக்கம் வாங்கியிருக்கோம். 2004ல வாங்கின வெள்ளியவும் சேர்த்து ஒலிம்பிக்கில் நம்ம வாங்கிய மொத்த பதக்கம் 17! (அட அதுவும் 8!!)

பதக்கம் வாங்கி தலைப்பு செய்தில வர்றோமோ இல்லையோ, கிளம்புறதுக்கு முன்னாடியே இப்படிபட்ட செய்தில நம்ம பேரு வந்திருது. இந்த இலட்சணத்தில்தான் டெல்லியில் 2020 ஒலிம்பிக் நடக்கிறத்துக்கான முயற்சி பண்ண போறோமாம்....!

சரி...ஒரு பக்கம்  காமெடி பண்ணிகிட்டு இருக்கட்டும்.

இப்ப இருக்கிற பட்டியலில் நம்பிக்கை நட்சத்திரங்கள் யாருனு (என்க்கு தெரிந்த வரை...) பாத்தா....
1) "TIME" பத்திரிக்கையில வந்த, ரத்தோர் - Shotting (Clay Pigeon Double Trap)
2) அஞ்சு ஜார்ஜ் - Athletics (Long Jump)
3) லியாண்டர் பயஸ்  &  மகேஷ் பூபதி - டென்னிஸ்
4) சானியா மிர்ஷா - டென்னிஸ்
5) மனவ்ஜித் சிங் - Shooting (Trap Men)
6) அபினவ் - Shotting (AirRifle)

சீன மண்ணில நம்மலோட தேசிய கீதமும் கேக்கணும்கிறதுதான் ஒவ்வொரு இந்தியர்களுடைய ஆசை! நிறைவேற்றுவார்களா?

பசி

www.freerice.com கேள்வி பட்டிருக்கீங்களா?

நம்ம சரியா பதில் சொல்ல ஒவ்வொரு கேள்விக்கும், நம்ம சார்பா 20 grain  (1 gram = 48 grains) அரிசி ஐ.நா உலக தானிய வங்கிக்கு (WFP) போகுது.  ஒரு கைப்பிடி அரிசிகூட கிடைக்காத மக்களுக்கு WFP மூலமா ஒரு வேளைக்காவது பசியை போக்க முயற்சி நடந்திட்டு இருக்கு.  இத sponsors பண்றவங்களோட நோக்கம் 'free vocabulary for everyone' & 'free rice for the hungry'.

உலகத்திலுள்ள வறுமைய ஒழிக்க ஆண்டுக்கு 30 பில்லியன் அமெரிக்க வெள்ளி இருந்தா போதுமாம்!! இதில AIDS, TB, மலேரியா போல நோய்களை முழுமையா ஒழிக்க 165  பில்லியன் அமெரிக்க வெள்ளி தேவைபடுது.

2006ல மட்டும் ஆயுதத்திற்கும், இராணுவத்திற்கும் உலக நாடுகள் செலவு செய்த மொத்த தொகை:  1.2 டிரிலியன் அமெரிக்க வெள்ளி !

22 நாடுகள்  சேர்ந்து 195 பில்லியன் அமெரிக்க வெள்ளி திரட்ட,  தங்கள் நாட்டின் வருமானத்தில 0.7% தர்றதா முடிவு பண்ணிருக்காங்கா.

ஒரு நாளைக்கு மட்டும் 25,000 பேரு பசியின் கொடுமையால சாகுறதா ஐ.நா குறிப்பு சொல்லுது (குறிப்பா, குழந்தைகள்). சரி..நம்ம குடுக்கிற 1 கிராமோ, 2 கிராமோ எத்தனை பேரோட பசியை போக்க போகுதுனு நம்ம நினைச்சா, முதன் முதலா freerice.com மூலமா பங்களாதேஷ்ல 27,000 பேருக்கு அரிசி கிடைக்க ஐ.நா WFP மூலமா வழி பண்ணிருக்காங்க.

இதில (vocabulary)  60 level இருக்காம்.  50ஐ தாண்டதே கஷ்டமாம்! முயற்சிதான் பண்ணிபாப்போமே!!

பயணங்கள் முடிவதில்லை!

எப்பொழுதும் இந்திய பயணத்தின் பொழுது, மனதில் இனம்புரியாத மகிழ்ச்சி இருக்கும். சென்னையில் இறங்கியவுடன் பாரதிராஜா பாணியில் 'என் இனிய தமிழ் மக்களே .... ' என சொல்ல தோன்றும். என்னமோ இந்த முறை அது "missing"! ;)

ஓரளவு திட்டமிட்டு பழைய பள்ளிக்கூடம், கல்லூரி, நண்பர்கள் ...... பார்க்க செல்வதுண்டு...இல்லையென்றால் தொலைபேசியிலாவது ஒரு ஹலோ சொல்வதுண்டு. இந்த முறை அந்த பட்டியலில் வலைப்பூ நண்பர்களையும் சேர்த்திருந்தேன். குடும்பத்தில் நடந்த ஒரு சில நிகழ்வுகளால் திட்டமிட்ட எதையும் செய்யும் மனநிலையில் இல்லை!

@

NH7 -- நான்கு வழிப்பாதை இப்பொழுதுதான் சூடு பிடித்திருக்கிறது போல..... குறிப்பாக மதுரை - திருநெல்வேலி!! சில கிராமங்களே அடையாளம் தெரியாத அளவு மாறியிருக்கிறது. புதிதாக செல்பவர்களுக்கு (தற்காலிகமாக ) கஷ்டம்தான்...குறிப்பாக இரவில். எச்சரிக்கை பலகையை இன்னும் கொஞ்சம் பெரிதாக வைத்திருக்கலாம். இந்த வேலை முடிந்து விட்டால், நானோவிலிருந்து, பெரிய பெரிய வாகனங்களுக்கெலாம் ஒரு வரப்பிரசாதம்தான். ம்ம்ம்....சைக்கிள், மாட்டுவண்டியில் செல்பவர்களாம் என்ன செய்வார்கள்?

@

சிவகாசி மணி ஸ்டோர், ஊர் பொருள்காட்சி, திருநெல்வேலி RMKV, கணேஷ் ஸ்டோர் வரை கிழக்கு பதிப்பகத்தின் புத்தங்களை பார்க்கமுடிந்தது. அசோகமித்திரனிலிருந்து, அள்ள அள்ள பணம், நம்ம செல்லமுத்து குப்புசாமியின் "இழக்காதே" வரை பார்க்க ஆச்சரியமாக இருந்தது.

சின்ன ஸ்டோர்களில் கேட்டபொழுது பொருள்காட்சிகளில் கடைபோட்டால் ஓரளவு விற்பதாக சொன்னார்கள். RMKVல் இன்னும் இரண்டு shelf அதிகமாக வைத்திருக்கலாம்!! ஆனால் இதுவே ஒரு நல்ல முயற்சிதான். பாராட்டுக்கள், பத்ரி & டீம்!

@

(தசாவதாரம் ரீலிஸ்க்கு முன்) திருவனந்தபுரம் சென்றபொழுது மலையாள பட போஸ்டர்களைவிட தசாவதாரம் போஸ்டர்தான் பார்க்கமுடிந்தது. அட நம்ம ஊர்லகூட இந்தளவுக்கு தசாவதாரம் போஸ்டர் பார்க்கமுடியலை. அப்புறம் குருவி.. அதற்கப்புறம்தான் சமீபத்தில் வெளியான கலாபன் மணி, மம்மூட்டி படத்தை பார்க்கமுடிந்தது.

@

தமிழ்மணம் பக்கம் வந்து ரொம்ப நாளாச்சேனு எட்டிப்பார்த்தா ..... அட ப்ருதிவிராஜ் மாதிரி freshஆ ... புதுசா இருக்கு. . என்னென்ன எங்கங்க இருக்கு புரிபட இன்னும் இரண்டு தடவை 'வந்துபோனா' சரியாயிடும்.

@@

குமுதம் இணையதள தொலைக்காட்சி நேர்காணல்: தமிழருவி மணியன்

இந்திய ஒருமைப்பாடு, ஒற்றுமை ....

காங்கிரஸ் கட்சியின் தலைமை, ஜனநாயக கொள்கை, காந்தியச்சிந்தனை...

காந்தி, காமராஜ், இராஜாஜி, சோனியா ......

விடுதலைப்புலி, பிரபாகரன், இராஜீவ் காந்தி, இனப்படு கொலை, ஈழத் தமிழர் பிரச்சினை .....

போன்றவகைகளைப் பற்றி குமுதம் இணையதள தொலைக்காட்சியில் தமிழருவி மணியன் அவர்களின் மிக அருமையான, யதார்த்தமான பேச்சு!

முன்னாள் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்....மூத்த காங்கிரஸ் தலைவர்.

ம்ம்ம்...இப்படியும் ஒரு காங்கிரஸ் தலைவரா...??


இதுமாதிரி நேர்காணலில் சம்பிரயாத்துக்குக்காக கேள்விகள் கேட்கும் பேட்டியாளரை என்னென்பது..?!

சினிமா: தமிழ், ஸ்பானிஷ் மற்றும் சில

Volver (to return) -- ஒரு திகில் படத்துக்கான எல்லா சாத்தியகூறுகள் இருந்தும் ....... இந்தப் படம் வேறொரு தடத்தில் பயணிக்கிறது.

வாழ்க்கையின் (பெண்களுக்கான) சில கொடுமைகளையும் அவலங்களையும் கடந்து .... ஆண்கள் இல்லாத 'உலகில்' அவர்களால் தங்களுக்கென்று விருப்பமான ஒரு வாழ்க்கையை வாழமுடியும் என்பதை பதிவு செய்கின்றது.

கொலை, பாலியல் வன்முறைகள்.... என்று கதைகளம் பின்னப்பட்டாலும் கதாபாத்திரங்களில் அதிர்ச்சியோ அல்லது கதை முழுவதும் சோகமோ இல்லாமல் இருப்பது படத்தின் சிறப்பு. வாழ்க்கையில் சில நிகழ்வுகள் நம்மையும் மீறி நடக்கும் பொழுது அதன்வழி சென்று தங்களுடைய இயல்பில் வாழும் கதாபாத்திரங்கள் படத்தின் மற்றொரு சிறப்பு. அதையே பார்ப்பவர்களுக்கும் உணர்த்துவது ... ம்ம்ம்.... அதுதான் இயக்குநரின் வெற்றி [Pedro Almodóvar] !

@

ஒன்பது ரூபாய் நோட்டு -- நாவலை படித்துவிட்டு படம் பார்ப்பதில்தான் எவ்வளவு வேறுபாடு. படிக்கும்பொழுதே சத்தியராஜ்ம், அர்ச்சனாவும் வந்துவிட்டு போவது தவிர்க்கமுடியவில்லை.

நாவலைவிட பல விடயங்களை படத்தில் அழகாகவும், யதார்த்தமாகவும் அதே சமயத்தில் அழுத்தமாகவும் சொன்னதற்கு தங்கர்பச்சானுக்கு வாழ்த்துக்கள். நமது கலாச்சாரம், மண்ணின் மணம் , அந்த மண்ணின் வாழும் மனிதர்களின் இயல்பான வாழ்க்கை முறை என படத்தில் இரசிப்பதற்கு பல விடயங்கள்......

இந்தப் படத்தின் நீதி .... வறட்டு கவுரம், பிடிவாதம் இதலாம் விட்டுக் கொடுக்காம இருக்கணும் என்பதா? அல்லது அதலாம் இருந்தா இதுதான் நிலமை.... அப்படினு எடுத்துகிறதா.... என்பது போன்ற கேள்விகள் எல்லாம் படம் பார்ப்பவர்களைப் பொறுத்து......

இதையெல்லாம் மீறி...... மாதவர் படையாட்சி போல் ஒருவரை பற்றி கேள்விப்பட்டு இருக்கலாம் அல்லது நம் வாழ்க்கையில் கடந்து வந்து இருக்கலாம். கிராமங்களுக்கு சென்றால் மாதவரைப்போல நம்மிடையே சிலருண்டு..... அப்படி ஒரு பதிவாகதான் இதை பார்க்கமுடிகிறது.

கதாபாத்திரங்களை சரியாக தேர்வு செய்தாலே படத்தின் பாதி வெற்றி என்பது போல கதாபாத்திரங்களின் தேர்வு கச்சிதம். அர்ச்சனா சில இடங்களில் கத்தல் அதிகமாக இருந்தாலும், சத்தியராஜ்க்கு சரியான போட்டி.

சத்தியராஜ்க்கு இந்த வருடம் தேசிய விருது கிடைக்கும் வாய்ப்பு அதிகம்!!

பல வருடங்களுக்கு முன் எழுதின நாவலை படத்திற்காக சிலதை மாத்தி இருக்கிறார் (நாசர் - ரோகினி காட்சிகள்...).

தங்கரின் பேட்டி (தமிழன், பிட்சா...) என்று சில வெறுப்பேற்றினாலும்..... இது மாதிரி படைப்புக்காக அதையெல்லாம் மறந்துடலாம்!

@

அஞ்சாதே -- டைட்டில் போடும் பொழுது படத்திற்குப் பின் இருக்கும் கலைஞர்களை முதலில் போட்டுவிட்டு நடிகர்/ நடிகைகள் பெயர்கள் கடைசியாக வரும் பொழுது ....... 'அட' !!

படத்தின் முதல் காட்சியில் 'காமிரா விளையாடும் விதம்' இது கொஞ்சம் வித்தியாசமதான் இருக்கும்போல என்ற எண்ணம் அதிகமாகிறது.

ஒரு 'தமிழ் படத்திற்கு' தேவையான எல்லா குணாம்சங்களும் இருக்கும் கதைகளம்தான். திகில் படமாகவும் எடுத்திருக்கலாம்.

இரண்டு கதாநாயகர்கள் - நரேன் & அஜ்மல், கதாநாயகி (விஜயலட்சுமி), வில்லன் [ ப்ரசன்னா (!) ], காமெடி [ பாண்டியராஜன் & குருவி கதாபாத்திரம்], குணசித்திரம் [பொன்வண்ணன்], டூயட், குத்துப்பாட்டு .... இதுவெல்லாம் இருந்தும், கதையை நாம் எதிர்பார்க்காத.... முற்றிலும் வேறொரு கோணத்தில் நகர்கிறது. கொஞ்சம் பிசகினாலும் கதை தவறாக புரிந்து கொள்ளப்படும் அபாயம் இருப்பினும் மிக நேர்த்தியாக ..... கதாபாத்திரங்களை நம்மில் படறவிடுவது... அதுவும் யாரும் எதிர்பார்க்காத கதாபாத்திரங்களில்..... ம்ம்ம்...இயக்குநருக்கு பாராட்டுகள்!

காவல் துறையில் சேரும் ஆரம்ப நாட்கள், அந்த பாட்டி, ஒளிஓவியம் குறிப்பாக..... மங்கலான அந்த வெளிச்சத்தில் கால்களை மட்டுமே காட்டும் காமிரா (திரையரங்குகளில் இதற்கு எப்படியான response இருந்தது என்று தெரியவில்லை..), இசை..... என்று படத்தில் ஏகப்பட்ட சமாச்சராங்கள்....

ஓரிரு பாடல்களை தவிர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

மகேந்திரன், பாலுமகேந்திரா, பாரதிராஜா, கமல், (காணமால் போன) அகத்தியன், சேரன், அமீர், மிஷ்கின் ............. என்று தமிழ் சினிமாவில் இப்படி பட்டியல் பெரிதாக வேண்டும்!!?

உண்மைதமிழன் இந்த படத்திற்கு பதிவு எழுதினதாக நினைவில்லை... அப்படி அவர் எழுதும் பட்சத்தில் ஒரு 50 பக்கம் குறுநாவல் உறுதி... !! ;) அவ்வளவு விசயம் இருக்கு இந்தப்படத்தில்.......

@

'ஆஸ்கர்' வெளிச்சதிற்கு பிறகே பார்க்க வேண்டும் என்று தோன்றிய படங்கள் -- No Country For Old Men & Juno !

No Country For Old Men - க்ரைம் த்ரில்லர். சைக்கோ கதாபாத்திரம். கோயன் சகோதரர்களின் வேறந்த படங்களும் பார்த்ததில்லை. படத்தில் பாதி காட்சிகளுக்கு மேல் இசையில்லை.

'The Silence Of the Lambs' ல் Anthony Hopkins பார்த்து மிரண்டு போனது (படம் பார்த்த பின்பும்..) ஒருவகையான சைக்கோ. இந்தப் படத்தில் வருவது மற்றொரு வகை. முற்றிலும் வித்தியாசமானது. படத்தில் திடீர் திருப்பங்கள் என்று எதுவும் இல்லாமல் ஆனால் பார்ப்பவங்களுக்கு ஒரு திகிலை உண்டாக்குகிறது.

இறுதி காட்சி என்றால் அடிதடி, சண்டை அல்லது 'வீர' வசனங்கள் என்றே பழக்கப்பட்ட நமக்கு ....காவல்துறை அதிகாரி (பெல்) தன் மனைவியிடம் அவருடைய கனவைப்பற்றி சொல்லும் இறுதி வசனங்கள்...... படத்திற்கே ஒரு அழுத்ததை குடுப்பதாகவே தோணுகிறது. [இரண்டு மூன்று முறை இறுதி காட்சியைப் பார்த்த பிறகுதான் புரிந்தது என்பது என்னுடைய தனி கதை !! ]

Juno - ரொம்ப எதிர்பார்ப்புகளுடன் பார்த்த படம் என்பதால் ஏமாற்றம். இவர்களுடைய வாழ்க்கை முறைகளை கொஞ்சம் தெரிந்து கொண்டு பார்த்தால் படம் பிடிக்கலாம். இல்லையென்றால் தூக்கம் வருவதை தவிர்க்க முடியாது. படத்தில் எனக்கு பிடித்தது... அந்த இறுதி காட்சி பாடலுடன்!!

@@

கல்லூரி - II

கல்லூரி - I

நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த பஜ்ஜி, சொஜ்ஜி, சூடான காபிக்கு பின்..... கலந்துரையாடல் தொடர்ந்தது...கொஞ்சம் 'காரமாகவே' ...

160 வருடம் பழமைவாய்ந்த ஒரு கல்லூரி......

ஒரு காலத்தில் தொழில்ஙட்ப கல்லூரிகளில் மட்டுமே இருந்த MCA போன்ற வகுப்புகள் முதல்முறையாக கலைக்கல்லூரியில் ஆரம்பித்த பெருமை தூயவளனார் கல்லூரிக்கு உண்டு.

எப்படி LIBA ஆரம்பித்த சில வருடங்களில் அதன் தரம் உயர்ந்து இப்பொழுது 'டாப் 10' ல் இருக்கிறது. ஆனால் தூயவளனார் கல்லூரியின் கணிப்பொறி பாடத்திட்டங்கள் மற்றும் இன்னும் பல துறைகளின் செயல்பாடுகள் 'கவலைக்கிடமாக' இருப்பதன் காரணம் என்ன.....?

கல்லூரியின் கடைசி வருடம் அல்லது படிப்பை முடித்துவிட்டு வெளியே வந்தவுடனாவது அடுத்து என்ன பண்ணலாம்கிற தெளிவை அந்த மாணவ/மாணவிக்கு கல்லூரியால் கொடுக்க முடியவில்லையே.....ஏன்....??

முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைத்து செயல்படுத்த இதுவரை ஒரு துறையோ...திட்டமோ ஏன் இல்லை....?

இப்படி கொஞ்சம் சூடாகவே திசை திரும்பியது....

இதற்கு சேசு சபையின் திட்டங்கள், கொள்கைகள்னு எளிதாக புறந்தள்ளிவிடக் கூடியவைகள் அல்ல...

அனைவரும் ஒருமித்த கருத்தாக சொன்னது.......
  • Active Carrier Guidance, student counseling/counsellors ...
  • More seminars, motivational speakers & industrial exposure
  • Planned campus interviews & get sponsorship
  • Improve communication/contacts between Alumi & College/School

* இதற்கு 'பிள்ளையார் சுழியாக ' முன்னாள் மாணவர்களுக்கென்று ஒரு துறை ஆரம்பித்தல்....

MIT போன்ற கல்லூரிகளில் இருப்பதுபோல ஒவ்வொரு (முன்னாள்) மாணவ/மாணவிகளுக்கென்று ஓர் எண் (Numbering System). உதாரணத்திற்கு 95CS12345 என்றால் எந்த வருடம் முடித்தவர், எந்த துறை மற்றும் அவரது வகுப்பு எண் அந்த கல்லூரியில் படித்தவர்களால் கண்டு கொள்ளமுடியும்.

டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் MITயின் அவருடைய எண்ணை குறிப்பிட்டால் MITல் படித்த எவரும் எளிதாக அவர்களுடைய சீனியர்களைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும்.

* இளங்கலை வகுப்புகளின் பாடத்திட்டங்கள் மற்றும் கண்டிப்பு OK... ஆனால் அதைபோல் முதுகலை வகுப்புகளிலும் இருப்பது .... உதாரணத்துக்கு .. (இதை நம்பிதான் ஆகணும்....) வகுப்பில் படிக்கும் பையனோ அல்லது பொண்ணோ கல்லூரி வளாகத்திலோ அல்லது வெளியவோ 'கடலை' போடுவது தெரியவந்தால் துறை தலைவரிடம் 'விளக்கம்' சொல்லும் அளவுக்கு சீரியசான matter....... !!

* பழைய மாணவ/மாணவிகள் நல்ல நிலையில், உயர்ந்த பதவிகளில் இருக்கிறார்கள். அவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளுக்கோ, கல்லூரிகளுக்கோ seminar, campus interview, indutrial expert speakers போன்ற ஏதாவதொரு வகையில் 'திருப்பி தர' நினைப்பவர்கள் தொடர்பு கொள்ள ஒருவரை நியமித்தல்...

* (Atleast) முதுகலை மாணவ/மாணவிகளையாவது inter-college competition, paper presentation போன்றவைகளில் கலந்து கொள்ள ஆசிரியர்கள் உற்சாகப்படுத்துதல்...

* வலைதளம், மின்னஞ்சல் மூலம் தொடர்பில் இருத்தல்..

* வருடத்திற்கு ஒரு முறையாவது இப்படியானதொரு கலந்துரையாடலில் கலந்து கொள்வது... அதை கல்லூரிக்கு தெரிவிப்பது.....

இப்படி சில ஆக்கபூர்வமான எண்ணங்களாக எதிரொலித்தது.

Photo sessionனோடு இனிதே நிறைவுற்றது.

இங்கு ஒன்றை குறிப்பிடவேண்டும். எந்தவொரு திட்டத்திற்கும் காசு தேவை. ஆனால் சேசு சபை நிறுவனங்களில் கல்வி கட்டணம் மிகக்குறைவு. புது கட்டிடம் அது இதுவென்று எந்த கட்டணமும் வாங்க மாட்டார்கள். பெரிய நிறுவனங்களில் இருந்தும் sponsorship வாங்க மாட்டார்கள். இந்த sponsorship பற்றி கொஞ்சம் பரிசீலனை செய்யலாம்!

ஜூன் 2007ல் தூய வளனார் கல்லூரி, திருச்சி என்றதொரு (கூகிள்) குழுமம் ஆரம்பித்துள்ளார்கள். மேலும் விவரங்களுக்கு josephites_trichy@googlegroups.com என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம்

குழுமத்தின் மூலம் இதுவரைவந்துள்ள newsletters இங்கே..

சேசு சபை நிறுவனங்களில் படித்த நண்பர்களின் பெயரை இங்கு இணைக்க/தொகுக்க எண்ணம்...

எனக்கு தெரிந்தவரை இங்கு பட்டியல் இடுகின்றேன்.... உங்களுக்கு தெரிந்தவர்களையும் சொல்லுங்கள்.
(விருப்பமில்லையென்றால் தெரிவிக்கவும்....... )

1. முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம்
2. எழுத்தாளர் சுஜாதா
3. வை.கோ
4. சுப்பு ரத்தினம் ஐயா, தஞ்சை
5. எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்
6. சகாதேவன் ஐயா, பாளையங்கோட்டை
7. ஜோ
8. ஜான் பீட்டர் பெனடிக்

....... வளரும்